தனஞ்சய் முண்டே எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா | அஜித் பவாருக்கு முற்றிய நெருக்கடி.. அமைச்சர் திடீர் ராஜினாமா!

மகாராஷ்டிராவில் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மகாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளன. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியில் உள்ளனர். மூன்று கட்சியைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர். இந்த நிலையில், மகாராஷ்டிராவில் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனஞ்சய் முண்டே

கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, பீட் மாவட்டத்தில் உள்ள காற்றாலை தளத்தில் இருந்த காவலாளியை, அண்டை கிராமத்தைச் சேர்ந்த அசோக் குலே, சுதர்ஷன் குலே, பிரதீக் குலே ஆகிய மூன்று நபர்கள் தாக்கினர். காவலாளியைக் காப்பாற்ற முயன்ற தேஷ்முக்கும் தாக்கப்பட்டார். டிசம்பர் 9ஆம் தேதியன்று தேஷ்முக் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். தேஷ்முக் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர், கொலைக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் இது சாதிய மோதலாகவும் முன்வைக்கப்பட்டது.

இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய வால்மிக் காரத் என்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உணவுத்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டேவுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, இந்த கொலையில் அமைச்சர் தனஞ்சய் முண்டேவிற்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இந்தச் சூழலில் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய கூட்டாளியான வால்மிக் காரத் காவல்துறையினரிடம் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து, உணவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து தனஞ்சய் முண்டே ராஜினாமா செய்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனஞ்சய் முண்டே மீது அழுத்தம் எழுந்த சூழலில், இந்த விவகாரம் குறித்து அஜித் பவாருடன், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆலோசனை மேற்கொண்டார்.

இதுகுறித்து தனஞ்சய் முண்டே, “சந்தோஷ் தேஷ்முக்கின் கொடூரமான கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பது முதல் நாளிலிருந்தே எனது உறுதியான கோரிக்கையாக இருந்து வருகிறது. நேற்று வெளிவந்த புகைப்படத்தைப் பார்த்தபோது, ​​நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த வழக்கின் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீதி விசாரணையும் முன்மொழியப்பட்டுள்ளது. எனது உறுப்பினர் விவேக் புத்தியின் ஞானத்தை நினைவில்கொண்டு, கடந்த சில நாட்களாக எனது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அடுத்த சில நாட்களுக்கு சிகிச்சை எடுக்குமாறு மருத்துவர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார். எனவே மருத்துவ காரணங்களுக்காக அமைச்சரவையிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.