பகவந்த் மான் எக்ஸ் தளம்
இந்தியா

பஞ்சாப் | காங்கிரஸ் பற்றவைத்த நெருப்பு.. ஆம் ஆத்மி அரசுக்கு சிக்கலா?

”மாநில ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 32க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருக்கின்றனர்” என பஞ்சாப் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸின் தலைவருமான பிரதாப் சிங் பஜ்வா தெரிவித்துள்ளார்.

Prakash J

பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தற்போது ஆம் ஆத்மியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லி சட்டசபைத் தேர்தலுக்குப் பின் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பஞ்சாபில் 2027ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மற்றும் லூதியானா மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இடைத்தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் எனவும், அதில் வெற்றி பெற்றால் முதல்வராக வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான்

இந்த நிலையில், ”மாநில ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 32க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருக்கின்றனர்” என பஞ்சாப் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸின் தலைவருமான பிரதாப் சிங் பஜ்வா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்ல, அமைச்சர்களும், பிற பெரிய தலைவர்களும் நம்முடன் தொடர்பில் இருக்கிறார்கள். மற்றவர்கள் பாஜகவுடன் தொடர்பில் இருக்க வாய்ப்புள்ளது. பகவந்த் மான் அரசு சரிவை நோக்கிச் செல்கிறது. ஆனால் காங்கிரஸ் எந்த சூழ்நிலையிலும் இந்த அரசாங்கத்தை சீர்குலைக்காது என்பதை நாங்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். பாஜகதான் அதைச் செய்யும். ஆம் ஆத்மி அரசு ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்யவே காங்கிரஸ் விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், ’மதுபானம் மற்றும் நில மோசடியில் ஆம் ஆத்மி ஆட்சி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஹவாலா பணத்தைப் பெற்று வருகிறது’ எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவருடைய இந்தக் கருத்துக்கு ஆம் ஆத்மி பதிலடி கொடுத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் நீல் கார்க், “பஜ்வா பாஜகவுக்கு மாறுவதற்கான செயல்பாட்டில் உள்ளார். அவர், ஏற்கெனவே பாஜகவில் தனது டிக்கெட்டைப் பெற்றுள்ளார். அவர் பெங்களூருவில் மூத்த பாஜக தலைவர்களைச் சந்தித்திருந்தார். ராகுல் காந்தி பிரதாப் பாஜ்வா மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

பகவந்த் மான்

எனினும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்ததிலிருந்து பகவந்த் மான் அரசாங்கம் பெரும் எதிர்க்கட்சி அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து, பஞ்சாப் அரசாங்கம் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு பெரிய அளவிலான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம், ஊழல் குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை 52 காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது.

பஞ்சாபில் மொத்தம் 117 இடங்கள் உள்ள நிலையில், அதில் 92 பேர் ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள். அங்குப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க ஒரு கட்சிக்கு குறைந்தது 59 இடங்கள் தேவை. தற்போது ஆம் ஆத்மிக்கு 92 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அதில் 32 பேர் கட்சி மாறினாலும் 60 எம்எல்ஏக்கள் இருப்பார்கள். ஒருவேளை, அப்படி நடந்தாலும் ஆம் ஆத்மி அரசுக்கு சிக்கல் வராது என்றபோதிலும், அது ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும்.