டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிடுகிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்!

டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிடுகிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்!
டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிடுகிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்!

தமிழக முதலமைச்சரை தொடர்ந்து, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் டெல்லி அரசு பள்ளிகள் மற்றும் மொஹல்லா மருத்துவமனைகளை நாளை பார்வையிடவுள்ளார்.

சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சக அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் அங்குள்ள அரசுப் பள்ளிகள் மொஹல்லா மருத்துவமனைகளை பார்வையிட்டு அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த அனுபவத்தை கேட்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக, நாளைய தினம் பஞ்சாப் முதலமைச்சர் பகவாந்த் மான் டெல்லி அரசுப் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை பார்வையிடுகிறார்.

இந்த பயணத்தின்போது பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சர்களும் உடன் வருவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது; அம்மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் பகவந்த் மான், டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கிளினிக்குகளை போலவே பஞ்சாப் மாநிலத்திலும் விரைவில் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.

குறிப்பாக, தனியார் பள்ளிகளுக்கு ஈடான கல்வியை அரசுப் பள்ளிகளிலும் வழங்குவதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் இலவச கிளினிக்குகள் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதலமைச்சரும், கல்வித் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் உடன் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com