பிஹார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய வேட்பாளர்களில் ஜித்தன் ராம் மான்ஜி, ரேயாசி சிங், ரேணு தேவி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
243 தொகுதிகள் கொண்ட பிஹார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவில் 64.69% சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பிஹாரில் நவம்பர் 11-ம் தேதியான இன்று இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தல், பிஹாரில் எஞ்சியுள்ள 20 மாவட்டங்களில் 122 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 1,302 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில், 136 பெண் வேட்பாளர்கள் அடக்கம். இரண்டாம் கட்ட தேர்தலுக்காக, 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தேசிய அளவில் மிகவும் கவனிக்கப்படக்கூடிய தேர்தலாக இருந்துவரும் பிஹாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு பிறகு 3 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1.95 கோடியாகவும், பெண் வாக்காளர்கள் 1.74 கோடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர்..
கடந்த 2020 பிஹார் சட்டமன்றத்தேர்தலில் 57.29% சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, 2025 முதல் கட்ட வாக்குப்பதிவிலேயே 65.04%ஆக உயர்ந்துள்ளது கவனத்தை பெற்றுள்ளது. இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கவிருக்கும் நிலையில், கதிஹார், பெட்டியா மற்றும் ஜமுய் போன்ற இடங்களில் பாஜக, ஆர்ஜேடி மற்றும் ஜன் சுராஜ் ஆகிய கட்சிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது..
இதில் முக்கிய வேட்பாளர்களாக ஹிந்துஸ்தானி அவாம் கட்சியின் ஜித்தன் ராம் மான்ஜி, பாஜகவின் ரேயாசி சிங் (காமன்வெல்த் போட்டியில்துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றவர்), ரேணு தேவி (பாஜக), பெட்டியாமகாபலி சிங் (ஐக்கிய ஜனதா தளம்), கராக்கட்சேத்தன் ஆனந்த் (ஐக்கிய ஜனதா தளம்) ராஜேஷ் குமார் (காங்கிரஸ் மாநிலத்தலைவர்), ஷகீல் அஹமத் கான் (காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர்), அஜித் குமார் ஷர்மா, பாகல்பூர் முகேஷ் யாதவ், பஜ்பட்டிசையத் அபு டோஜானா போன்ற வேட்பாளர்கள் இடையே போட்டி நிலவுகிறது..