ஜம்மு-காஷ்மீருக்கு ‘சிறப்பு நிலை’ (சிறப்பு அந்தஸ்து) வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை சரியென்றே உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தந்துவிட்டதைப்போல பரவலாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ‘சிறப்பு நிலையை நீக்கிய தங்களுடைய செயலை உச்ச நீதிமன்றமே சரியென்று உறுதிப்படுத்திவிட்டதாக’ ஒன்றிய அரசும் கூறுகிறது, சில சட்ட நிபுணர்களும் அதை ஒப்புக்கொண்டுவிட்டதைப் போலத் தோன்றுகிறது.
இது முற்றிலும் தவறு, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் 2023 டிசம்பர் 17-இல் எழுதிய கட்டுரையில், ‘பெரும் அநீதியாக மாறக் கூடிய எதிர்காலம்’ (Towards a Dystopian Future) என்று தலைப்பிட்டு அதை விவரித்திருந்தேன். சிறப்பு அந்தஸ்தை நீக்கிய நடவடிக்கை தொடர்பாக, ஒன்றிய அரசு கருதுவதைப்போல ஒப்புதல் தராமல், அதற்கு மாற்றான நிலையைத்தான் உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியிருந்தது.
அரசமைப்புச் சட்டத்தின் 370 (1) பிரிவை எடுத்துக்கொண்டு, அரசமைப்புச் சட்டத்தின் 367 அனுமதிப்பதற்கேற்ப, துணைப் பிரிவை (4) அதில் சேர்த்தது. இவ்விதம் சேர்க்கப்பட்ட விரிவான விளக்கப் பிரிவைக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்தின் 370 (3) என்ற இணைக்கப்பட்ட நிபந்தனையில் திருத்தம் செய்தது; அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 (3)-ஐ யும் அதில் இருந்த பிரிவையும் திருத்தி ‘அரசமைப்புச் சட்டம் 370 முழுக்க திருத்தப்பட்டதைப் போல’ ஆக்கியது. இந்த மூன்று நடவடிக்கைகளுமே அனுமதிக்கப்பட முடியாதது, அரசமைப்புச் சட்டப்படி செல்லாதது என்றுதான் உச்ச நீதிமன்றம் கருதியது.
இருப்பினும், ‘அரசமைப்புச் சட்டத்தின் 370 (1) பிரிவின் கீழ் வரும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு நிலை (அந்தஸ்து) தொடர்பாக எடுத்த நடவடிக்கை செல்லுபடியாகும், அது அரசமைப்புச் சட்டத்த்தின் 370-வது பிரிவை நீக்குவதற்கு ஒப்பாகும்’ என்றது.
அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான நடவடிக்கை, ‘பகுதியளவிலான சட்டத் தயாரிப்பு மூலம்’ நுட்பமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது அனுமதிக்கப்பட முடியாதது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. எதை உச்ச நீதிமன்றம் ஏற்றது என்றால், ‘370 (1) என்ற பிரிவின் கீழ் அல்லது அந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள அனைத்து இணைப்பு நிபந்தனைகளையும் ஒரே சமயத்தில் அரசு பயன்படுத்தியது சரியே’ என்றுதான் கூறியிருக்கிறது.
எப்படியோ, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட ‘சிறப்பு நிலை’ ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற உண்மையை ஏற்போம். தங்களுடைய மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு நிலையை ரத்து செய்த ஒன்றிய அரசின் செயல் ஜம்மு-காஷ்மீர் மக்களுடைய மனங்களில் கசப்பை ஏற்படுத்திவிட்டது. எதேச்சாதிகாரத்துடன் செயல்பட்ட ஒன்றிய அரசுக்கு எதிராக அவர்களுடைய கோபம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அரசமைப்புச் சட்டம் 370-ஐ ரத்து செய்ததுடன் விவகாரத்தை முடித்துவிடவில்லை. இந்தியாவுடன் இணைந்தது முதல் ஒரே மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீரம் இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக (மத்திய நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதி) ஆகஸ்ட் 5-இல் பிரிக்கப்பட்டது. அது சட்டப்படியானதா, ஏற்கத்தக்கதா? உச்ச நீதிமன்றம் இதையும் விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரினர். ‘ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு (லடாக் பகுதி நீங்கலாக) மாநில அந்தஸ்தைத் திரும்ப வழங்குவதும், சட்டப் பேரவைக்குப் பொதுத் தேர்தல் நடத்துவதும்தான் தங்களுடைய நோக்கம்’ என்று ஒன்றிய அரசு கூறியதால் மனுதாரர்களின் கோரிக்கை விசாரணைக்கு ஏற்கப்படவில்லை.
ஒன்றிய அரசின் மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லுபடியாகுமா என்ற கேள்வியை அப்படியே தொங்கலில் விட்டுவிட்டு, ‘ஜம்மு-காஷ்மீருக்கு 2024 செப்டம்பர் 30-க்குள் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்’ என்று மட்டும் நாள் குறித்தது. பிறகு 2024 செப்டம்பரில் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடந்தது. ஆனால் இன்று வரையில் மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த வாக்குறுதியை இதன் மூலம் அப்பட்டமாக மீறியிருக்கிறது ஒன்றிய அரசு.
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாமல் இழுத்தடித்துக் கொண்டே போவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி - குறிப்பாக பாரதிய ஜனதா – தான் காரணம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிற தோழமைக் கட்சிகளும் ஒன்றிய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளதால் இந்த குற்றத்துக்கு உடந்தையாகத்தான் கருதப்பட வேண்டும்.
சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி) ஜம்மு-காஷ்மீரில் 2024 அக்டோபர் 16- இல் ஆட்சி அமைத்தது. 2017 ஜூன் முதல் மக்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்பதால், அவர்களுக்காக அரசை அமைத்து அவர்களுடைய குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி விரும்பியது இயல்பானதே. ‘அரசியல் வியூகம்’ காரணமாக, மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அது உரத்து வலியுறுத்தாமல் மௌனம் காத்தது.
மாநில அந்தஸ்து வேண்டும் என்று உரத்த குரலில் தொடர் வலியுறுத்தல் ஏதும் மாநில ஆளும் கட்சியிடமிருந்து வராததால், அது அவர்களுடைய முன்னுரிமையான கோரிக்கை இல்லை போலிருக்கிறது என்று ஒன்றிய அரசு நம்புகிறது. ஆனால் மாநில மக்களோ, மாநில அந்தஸ்து தங்களுக்குத் தரப்படாததைத்தான் மிகப்பெரிய உரிமை மறுப்பாகக் கருதுகிறார்கள். மாநில அரசு கடந்த பத்து மாதங்களில் என்னதான் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருந்தாலும் மாநில அந்தஸ்து தரப்படாததால் அரசுக்கு மக்களிடம் ஆதரவு பெருகவில்லை. மாநில அந்தஸ்தை தொடர்ந்து வலியுறுத்தாமல் விட்டுவிட்டோமே என்று தேசிய மாநாட்டுக் கட்சி இப்போது உணர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம்.
பஹல்காம் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் அனைவரையுமே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் தவிர இந்தியாவில் வசிப்பவர்களிலேயே சில பயங்கரவாதிகளும் இதன் பின்னணியில் இருக்கின்றனர் என்று நான் தொடர்ந்து சொல்லிவருகிறேன். யார் எங்கே தாக்குகிறார்கள், இரண்டு பிரிவினரும் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்துகொண்டு தாக்குகின்றனரா என்பதெல்லாம் சம்பவம் நடப்பதற்கான வாய்ப்புகள் இடங்களைப் பொறுத்து அமைகிறது.
பாகிஸ்தானிலிருந்து வந்த 3 பயங்கரவாதிகளுக்கு உணவும் தங்க இடமும் கொடுத்ததாக, இந்தியாவைச் சேர்ந்த இருவரை என்ஐஏ கைது செய்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மற்றும் ஜூலை 28-29-இல் மோதலில் 3 வெளிநாட்டு பயங்கரவாதிகளைக் கொன்ற பிறகு, பஹல்காம் விவகாரத்தில் அரசு திரையை இழுத்து மூடிவிட்டதாகத் தெரிகிறது. என்ஐஏ கைது செய்த 2 பயங்கரவாதிகள் யார், அவர்களைப் பற்றிய தகவல்கள் என்ன என்று எதுவுமே வெளியாகவில்லை. அவர்கள் இன்னமும் என்ஐஏ காவலில் இருக்கிறார்களா அல்லது அந்த வழக்கே முடிக்கப்பட்டுவிட்டதா? எல்லாம் ஒரே மர்மமாக இருக்கிறது.
ஆனால் மக்கள் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார்கள். மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற ஒன்றிய அரசின் உறுதிமொழி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதை மக்கள் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார்கள். இந்த உறுதிமொழியை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை என்பதை கவனத்துக்குக் கொண்டுவந்து உச்ச நீதிமன்றத்தை சிலர் அணுகியபோது, பஹல்காமில் நடந்த சம்பவங்களை நாம் புறக்கணித்துவிட முடியாது என்பதுடன் மேலும் சில கருத்துகளை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அந்தக் கருத்துகள் ஜம்மு-காஷ்மீர் மக்களை (வாக்குறுதிகள் காப்பாற்றப்படும் என்ற) மாயையிலிருந்து இப்போது விடுவித்திருக்கும். இன்னும் 8 வாரங்களுக்குப் பிறகு இந்த மனுக்கள் மீது மீண்டும் விசாரணை தொடங்கும்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சட்டரீதியிலான அம்சங்கள் மீது மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. அரசியல் விவகாரங்களும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளும் எழுவதும் - அடங்குவதுமாகத்தான் இருக்கும். சட்டப்படிதான் அரசு செயல்படுகிறதா என்பதை ஆராய வேண்டிய கடமையிலிருந்து உச்ச நீதிமன்றம் திசை திரும்பிவிடக்கூடாது.
ஒன்றிய அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று, இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதிலிருந்து உச்ச நீதிமன்றம் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டது. வாக்குறுதி தந்து 20 மாதங்களுக்குப் பிறகும் அவை நிறைவேற்றப்படவில்லை. கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கூற வேண்டும் அல்லது மாநில அந்தஸ்து ரத்து தொடர்பான அரசின் நடவடிக்கைகள் சட்டப்படி செல்லத்தக்கதுதானா என்று விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தைக் கட்டிக்காக்க வேண்டிய நீதிமன்றம், நீதி வழங்கும் என்று நம்புகிறேன்.