”தமிழகத்திற்கு அதிக நிதி கொடுத்தீங்களா..?” - பிரதமர் மோடியின் பேச்சுக்கு ப. சிதம்பரம் பதிலடி!
ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி , பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு தங்கள் அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 3 மடங்கு அதிகமான நிதியை அளித்திருப்பதாகவும் அது மாநிலத்தின் வளர்ச்சிக்கு வெகுவாக உதவியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், அவ்வளவு பணம் ஒதுக்கியும் சிலர் அழுவதாகவும் விமர்சித்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எதிர்வினையாற்றியுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், “ மாண்புமிகு பிரதமரும் மத்திய அமைச்சர்களும் 2004 -14 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதை விட 2014-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு அதிக நிதி வழங்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். உதாரணமாக, மாண்புமிகு பிரதமர் , தனது அரசாங்கம் தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு முன்பை விட ஏழு மடங்கு அதிகமாக நிதி வழங்கியுள்ளதாக கூறியிருக்கிறார்.
பொருளாதார அளவீடு' என்பது எப்போதும் முந்தைய ஆண்டுகளை விட நடப்பாண்டு அதிகமாகதான் இருக்கும் என்று பொருளாதாரம் படிக்கும் முதலாமாண்டு மாணவி கூட கூறுவார். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு இப்போது முன்பை விட அதிகமாக உள்ளது. மத்திய பட்ஜெட்டின் அளவு ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட அதிகமாக உள்ளது. அரசாங்கத்தின் மொத்த செலவு ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட அதிகமாக உள்ளது. நீங்கள் முந்தைய ஆண்டை விட ஒரு வருடம் மூத்தவர்.
'எண்களின்' அடிப்படையில், எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் அது அதிகமாக உள்ளதா அல்லது மொத்த செலவினத்தின் விகிதத்தில் அது அதிகமாக உள்ளதா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.