சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி எக்ஸ் தளம்
இந்தியா

”'இந்து' என்ற கார்டை வைத்து என்னிடம் விளையாடாதீர்கள்” | பாஜகவுக்கு மம்தா பானர்ஜி பதிலடி!

பாஜக எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரியின் கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.

Prakash J

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. தற்போது அங்கு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சபாநாயகர் பிமன் பந்தோபாத்யாய், நேற்று அவை நடவடிக்கைகள் தொடர்பான எந்த ஆவணத்தையும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டாம் என்று அவை செயலாளருக்கு உத்தரவிட்டார். சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வ ஆவணங்களை கிழித்ததை அடுத்து பந்தோபாத்யாயின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சுவேந்து அதிகாரி

இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, பந்தோபாத்யாயின் இந்த முடிவை ”இந்திய அரசியலமைப்பின் அரிதான சம்பவம்" என விமர்சித்தார். மேலும் அவர், “சட்டமன்றத்திற்குள்கூட ஜனநாயகம் இல்லை. எதிர்க்கட்சிகள் கேட்கப்படுவதில்லை. திரிணாமுல் காங்கிரஸ் அரசு எல்லாவற்றையும் பலவந்தமாகச் செய்ய முயற்சிக்கிறது” என்றார். முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சபாநாயகரின் நாற்காலியை அவமதித்ததாகக் கூறி மார்ச் 18 வரை சட்டமன்றத்தில் இருந்து சுவேந்து அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய அவர், இந்து கோயில்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல்கள் நடப்பதாகத் தெரிவித்தார். மேலும் மாநில அரசு வகுப்பு வாதத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து அவர், “பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, திரிணாமுல் கட்சியின் முஸ்லிம் எம்எல்ஏக்களை நாங்கள் சபையிலிருந்து வெளியேற்றுவோம்" எனத் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி

இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர், ”புனித ரமலான் மாதம் நடைபெற்று வருவதால், இஸ்லாமியர்களை டார்கெட் செய்கிறார்கள். நிலவும் பிரச்னைகளை திசைதிருப்ப, மதரீதியாகப் பேசி வருகின்றனர். நான் ஓர் இந்து. இதற்கு பாஜக எனக்கு சான்று கொடுக்க வேண்டியதில்லை. ஒருவர் இந்துவோ, சீக்கியரோ, பெளத்தரோ, இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ... ஒரு முதல்வராக அவர்கள் அனைவரையும் அரவணைப்பது என் பொறுப்பு.

நீங்கள் போலி இந்துத்துவத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது. ஆகையால் தயவுசெய்து என்னிடம் ‘இந்து’ என்ற கார்டை வைத்து விளையாடாதீர்கள்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.