நாட்டு வெடிகள் பறிமுதல்  X
இந்தியா

மேற்கு வங்கம் | ஏப்ரல் 29ல் கடைசி கட்ட தேர்தல்.. திரிணாமுல் தொண்டர் வீட்டில் 100 நாட்டு வெடிகள்!

மேற்குவங்க மாநிலத்தில் 2-ம் கட்ட (இறுதி) வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் வீட்டில் 100 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவித்திருந்த நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு 152 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் நடந்து முடிந்திருக்கிறது. இதில், மேற்கு வங்கத் தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சுமார் 93.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்தசூழலில் தான், மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட (இறுதி) வாக்குப்பதிவு நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான, தேர்தல் பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது.

மேற்கு வங்கம், மம்தா பானர்ஜி

இந்தசூழலில் தான், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவரின் வீட்டில் 100 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு வங்கத்தின் பாகூர் பகுதியில், ரபிக்குல் இஸ்லாம் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பசீர்ஹாட் உத்தர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பு கம்யூனிஸ்ட் ஆதரவாளராக இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உளவுத்துறை தகவல் அடிப்படையில் நடைபெற்ற சோதனையின்போது, பயனில் இல்லாத கட்டிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் பிடிபட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளுங்கட்சி நிர்வாகியின் வீட்டிலேயே குண்டுகள் பிடிபட்டது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

நாட்டு வெடிகுண்டுகள்

வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதன் பின்னணியில் ஏதேனும் பெரிய சதித்திட்டம் உள்ளதா என்பதைக் கண்டறிய வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மாநில காவல்துறைத் தலைவருக்கு (DGP) தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது பழிசுமத்தவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.