செய்தியாளர்: மகேஷ்வரன்
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி, பஞ்சாரகொல்லி பகுதியில் கடந்த 24ம் தேதி காபி பறிக்கச் சென்ற பெண்ணை புலி தாக்கிக் கொன்றது. இதையடுத்து புலியை சுட்டுக் கொல்ல வலியுறுத்தி கிராம மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில், நேற்று காலை புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட வனத்துறை பணியாளரை புலி தாக்கியது.
இதைத் தொடர்ந்து புலி தாக்கி உயிர் இழந்த பெண்ணின் வீட்டிற்கு ஆறுதல் சொல்ல வந்த கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசிந்தரனை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து புலியை உடனடியாக சுட்டுக் கொள்வதற்கான உத்தரவும் வெளியானது. நள்ளிரவு புலி பிலாக்காவு பகுதியில் நடமாடியதை உறுதி செய்த வனத்துறையினர் அதனை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்தனர்.
பிலாக்காவு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் புலி பதுங்கி இருப்பது தெரியவந்தது. இன்று காலை புலியை பிடிப்பதற்கான ஆயத்த பணிகளை வனத்துறை குழுவினர் மேற்கொண்டார்கள். இதற்காக புலி நடமாட்டம் உள்ள 4 கிராமங்களில் ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டிருந்தது. புலி பிலாக்காவு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அருகில் படுத்திருப்பதை உறுதி செய்து அதன் அருகே வனத்துறையினர் நெருங்கி இருக்கிறார்கள்.
அப்போது புலி உயிரிழந்த நிலையில் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புலியின் உடல் மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பெண் கொல்லப்பட்ட பகுதியில் 24 ஆம் தேதி பதிவான புகைப்படத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது உயிரிழந்தது அதே புலி தான் என வனத்துறை உறுதி செய்திருக்கிறது. புலியின் உடலில் ஏராளமான காயங்கள் இருக்கின்றன. ஏற்கனவே வேறொரு புலி உடன் ஏற்பட்ட மோதலில் இது பலத்த காயம் அடைந்து மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறுகின்றனர்.
அந்த காயங்கள் காரணமாகவும் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். இருப்பினும் புலியின் பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. உயிரிழந்த புலி, சுமார் 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.