அபிஜித் தீப்கே எக்ஸ் தளம்
இந்தியா

“BJP-லே உடனே சேரு.. இல்லனா..” மிரட்டப்பட்டாரா அபிஜித் தீப்கே? நடந்தது என்ன?

அபிஜீத் திப்கே பாஜகவில் சேராவிட்டால் அவரது குடும்பத்தினர் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டல் வந்ததாக தீப்கேவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Prakash J

நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை காரணமாக, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் அபிஜித் தீப்கே தலைமையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து, இறுதியில் அவர் பதவி விலகினார். இந்த வெற்றி மாணவர் போராட்டத்தின் வலிமையை வெளிப்படுத்தியது. மேலும், இந்த போராட்டம் நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

அபிஜித் தீப்கே

இதற்கிடையே, கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம் தீவிரமடையும் என அபிஜித் தீப்கே எச்சரித்திருந்தார். இந்த நிலையில், தனது மகன் வீடு திரும்பாதது குறித்து அவரது தாயார் கவலை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மகாராஷ்டிராவில் அபிஜித்தின் பெற்றோரை சிவசேனா அமைச்சர் ஷிர்சத் நேரில் சந்தித்துப் பேசியதுடன் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார். தற்போது அவர் வீடு திரும்பிய நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அபிஜீத் திப்கே பாஜகவில் சேராவிட்டால் அவரது குடும்பத்தினர் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டல் வந்ததாகவும், இதனால் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள தங்கள் வீட்டைத் தற்காலிகமாக விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மராத்தி ஊடகம் ஒன்றுக்கு தீப்கேயின் தாயார் அனிதா தீப்கே அளித்துள்ள பேட்டியில், ”தனது மகன் தனது நையாண்டி அரசியல் இயக்கத்தைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அந்த மிரட்டல் வந்தது. அபிஜித் ஆரம்பத்தில் இந்த மிரட்டல் குறித்து எங்களுக்குத் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் அவர் பாஜகவில் உடனே சேர மறுத்தால் நாங்கள் குறிவைக்கப்படுவோம்” என ஒரு காணொளி எச்சரித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் அபிஜித்தின் அறிவுரையை ஏற்று, அவரது பெற்றோர் கொங்கன் பகுதியில் உள்ள ஓர் உறவினர் வீட்டிற்குச் சென்று, அங்கு சுமார் 16 நாட்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.