வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தை கடந்து, ஜெகதாம்பா பால் குழுவின் அறிக்கையை இன்று (ஜன 30) சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்தார். குழுவின் 650க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அறிக்கையுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்துள்ள அதிருப்தி அறிக்கைகளும் சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளன.
வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா நாடாளுமன்ற குழுவின் பரிசீலனைகள் சேர்க்கப்பட்டு மக்களவையில் விவாதத்துக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பரிந்துரைத்த 14 திருத்தங்களை நாடாளுமன்ற குழு ஏற்றுக் கொண்டுள்ளது. அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற குழுவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுவான பெரும்பான்மை உள்ளதால், குழுவின் அறிக்கையை ஜகதம்பா பால் இறுதி செய்து சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்துள்ளார்.
மக்களவையில் திருத்தப்பட்ட மசோதா விவாதத்துக்கு வரும்போது, மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவை கடுமையாக எதிர்க்க திட்டமிட்டுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம் எனவும் வக்ஃப் விவகாரங்களில் அரசு தலையீடு கூடாது எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.