செய்தியாளர்: எம்.மீரா
இந்தியாவில் மருத்துவமனைத் துறை வேகமாக வளர்ந்து வருவதால், அதில் முதலீடு செய்ய வால் ஸ்ட்ரீட் இந்தியாவுக்கு வந்துள்ளது என்று Bloomberg செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மருத்துவத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு முதலீடு வேகமாக அதிகரித்து வருகிறது. Blackstone, KKR, TPG, General Atlantic உள்ளிட்ட உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள், இந்தியாவில் இருக்கும் பல கிளைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் முதலீடு செய்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 பில்லியன் டாலர், அதாவது ரூ.80,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த முதலீடுகள் மூலம் புதிய மருத்துவமனைகள், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் உயர்தர சிகிச்சை வசதிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இதயம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைகள் உள்ளிட்ட அதிக செலவாகும் துறைகளில் தனியார் மருத்துவமனைகளின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் மருத்துவமனைப் படுக்கைகளின் எண்ணிக்கை இன்னும் தேவைக்குக் குறைவாகவே உள்ளது. 1,000 பேருக்கு சுமார் 1.3 மருத்துவமனைப் படுக்கைகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவத் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை உலகளாவிய முதலீட்டாளர்கள் முக்கியமாகப் பார்க்கின்றனர்.
ஆனால், இந்த முதலீடுகள் மருத்துவச் செலவை அதிகரிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றக் குழு ஒன்று, மருத்துவத் துறையில் வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்தது. பெரிய நிறுவனங்கள் சிறிய மற்றும் நடுத்தர மருத்துவமனைகளை வாங்குவதால், மருத்துவக் கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்தக் குழு சுட்டிக்காட்டியது. மருத்துவமனைகளுக்கான கட்டண வரம்பு மற்றும் தனி ஒழுங்குமுறை அமைப்பு குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
மறுபுறம், காப்பீட்டு நிறுவனங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக காப்பீட்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன. அதே நேரத்தில், காப்பீட்டு நிறுவனங்கள் தாமதமாக பணம் வழங்குவதால் தங்களது லாபம் பாதிக்கப்படுவதாக மருத்துவமனைகள் கூறுகின்றன.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான செலவு, அரசு மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது சராசரியாக 5 முதல் 10 மடங்கு அதிகமாக இருப்பதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக புற்றுநோய், இதய நோய், சிறுநீரக சிகிச்சை மற்றும் மகப்பேறு சிகிச்சைகளில் இந்த வித்தியாசம் அதிகமாக உள்ளது.
இதற்கிடையே மருத்துவச் செலவு ஆண்டுக்கு 13% வரை அதிகரித்து வருவதாகவும் நாடாளுமன்ற அறிக்கை கூறுகிறது.
நவீன தொழில்நுட்பங்கள் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துவதாக மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன. ஆனால், ரோபோட்டிக் அறுவைசிகிச்சை போன்ற சில புதிய முறைகள் அதிக செலவு கொண்டதாகவும், அதற்கேற்ற மருத்துவப் பலன் கிடைக்கிறதா என்பதை ஆராய வேண்டும் என்றும் காப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன.
இவ்வாறு இந்திய மருத்துவத் துறையில் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் செய்த முதலீடுகளால் புதிய மருத்துவமனைகள் மற்றும் நவீன சிகிச்சைகள் அதிகரித்தாலும், மருத்துவச் செலவு உயருமா என்ற கவலை எழுந்துள்ளது.