அதே தொகுதியில் அதே வேட்பாளர்.. TMC-லிருந்து விலகிய நடிகை ருக்மினி மல்லிக்.. பாஜக போட்ட மாஸ் ப்ளான்!
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 16 அன்று நடைபெற இருக்கிறது. இதில், மேற்கு வங்கத்தில் இருந்து நடிகை ருக்மினி மல்லிக்கையும், உத்தரகாண்டில் இருந்து தினேஷ் ஆர்யாவையும் பாஜக களமிறக்கியுள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 16 அன்று நடைபெற இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கும், உத்தரகாண்டில் 1 இடத்திற்கும் இந்தத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு இடங்களிலும் தற்போதைய உறுப்பினர்களின் பதவிக்காலம் நவம்பர் 25 அன்று முடிவடைகிறது. அதேநேரத்தில், மேற்கு வங்கத்தில் ஒரு இடத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் கோயல் மல்லிக் எனப் பிரபலமாக அறியப்படும் ருக்மினி மல்லிக், ஜூலை 16 அன்று தனது பதவியை ராஜினாமா செய்ததால் மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அந்த இடைத்தேர்தலில் ருக்மினி மல்லிக் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிரபல மூத்த வங்காள திரைப்பட நடிகர் ரஞ்சித் மல்லிக்கின் மகளான இவர், 2003-ஆம் ஆண்டு முதல் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வங்காளத் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார். 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஜூலை 2026-இல் அக்கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாகத் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அந்த இடத்தைப் பிடிக்க பாஜக தற்போது அவரையே மீண்டும் வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது
அதேபோல், உத்தரகாண்டில் தினேஷ் ஆர்யாவை களமிறக்கி உள்ளது. 2002-ஆம் ஆண்டு முதல் பாஜகவில் தீவிரமாக இயங்கி வரும் இவர், தற்போது உத்தரகாண்ட் மாநில அரசின் மாநில அளவிலான குடிநீர் கண்காணிப்பு கவுன்சிலின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். இது மாநில அமைச்சருக்கான அந்தஸ்து ஆகும். ஹல்த்வானி பகுதியைச் சேர்ந்த இவர், உத்தரகாண்ட் மாநில பாஜகவின் முக்கிய பட்டியலின தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும், 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பாஜகவிற்கு 47 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் தினேஷ் ஆர்யாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

