அகமதாபாத் விபத்தில் விமானத்திலிருந்த 242 பேரில், 241 பேர் உயிரிழந்துள்ளதாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயிர் பிழைத்த விஷ்வாஸ் குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. 39 வயதாகும் விஷ்வாஸ் குமார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரஜை. 20 வருடங்களாக லண்டனில் வசிக்கும் அவரின் குடும்பம் விஷ்வாஸின் பயணத்தின்போது லண்டனில் இருந்திருக்கின்றனர்.
விஸ்வாஷ் குமார் மார்பு, கண்கள் மற்றும் கால்களில் பலத்த காயங்களுடன் அகமதாபாத்திலுள்ள அசர்வா சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தனது போர்டிங் பாஸையும் கைகளில் வைத்திருந்தார். தான் 11A இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விஷ்வாஸ் குமார் இந்த விமான விபத்து குறித்துப் பேசும்போது எல்லாம் மிக வேகமாக நடந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “புறப்பட்ட 30 வினாடிகளுக்குள் பெரிய சத்தம் கேட்டது. பின் விமானம் விபத்திற்குள்ளானது. எல்லாம் மிக வேகமாக நடந்துவிட்டது. நான் கீழே விழுந்து எழுந்ததும் என்னைச் சுற்றி உடல்கள் இருந்தன, முதலில் பயந்துவிட்டேன். பின் எழுந்து ஓடிவிட்டேன். எங்கும் விமானத்தின் பாகங்கள் இருந்தன. யாரோ என்னைப் பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
விஷ்வாஸ் இந்தியாவிலுள்ள அவரது குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு, தனது மூத்த சகோதரர் அஜய் குமார் ரமேஷுடன் இங்கிலாந்து திரும்புகையில் இந்த விபத்து நடந்ததாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நாங்கள் DIUவிற்குச் சென்றோம்,. அவர் என்னுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். இப்போது அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். விஷ்வாஸ் குமாரின் சகோதரர் குறித்தான விபரங்கள் தற்போதுவரை முழுமையாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்தபின் விஷ்வாஸ் லண்டனில் உள்ள தனது உறவினரைத் தொடர்பு கொண்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசியிடம் பேசிய விஷ்வாஸின் உறவினர் அஜய் வால்கி, “அவர் நலமாக இருப்பதாக மட்டுமே கூறினார். வேறு எதுவும் சொல்லவில்லை. அவர் நலமாக இருப்பதில் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகிறார்கள். ” எனத் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த சில நிமிடங்களுக்குப் பின் விஷ்வாஸ் தனது தந்தைக்கு வீடியோ காலில் அழைத்துப் பேசியதாக விஷ்வாஸின் மற்றொரு சகோதரர் நயன் குமார் ரமேஷ் ஸ்கை நியூஸிடம் தெரிவித்துள்ளார். விமானம் விபத்துக்குள்ளானபோது தன் அப்பாவை வீடியோ காலில் அழைத்து விமானம் விபத்திற்குள்ளாகிவிட்டதாகத் தெரிவித்த விஷ்வாஸ், சகோதரர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தான் எப்படி உயிருடன் இருக்கிறேன் என்றும் எப்படி விமானத்திலிருந்து வெளியேறினேன் என்றும் தனக்குத் தெரியவில்லை என விஷ்வாஸ் தெரிவித்ததாக நயன் குமார் ரமேஷ் கூறியுள்ளார்.
அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் பேராசியரும் அறுவை சிகிச்சைத் தலைவருமான ரஜ்னிஷ் படேல், “விஷ்வாஸின் உடல்நிலை சீராகவே இருக்கிறது. சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களில் தெரிவதுபோல் அவருக்கு அவ்வளவு பெரிய காயம் இல்லை. அவர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.,
விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தது குறித்து அகமதாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நல்ல செய்தி என்னவென்றால் ஒருவர் உயிர் தப்பியுள்ளார். அவரைச் சந்தித்தபின் நான் இங்கு வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.