இளைஞர் நரேந்திரன் கோப்புப்படம்
இந்தியா

ஆந்திரா: கடனை கொடுக்காததற்காக இப்படியா? ஆன்லைன் செயலியின் கேவலமான செயலால் விபரீத முடிவெடுத்த இளைஞர்!

கணவரொருவர் தான் வாங்கிய கடனைத்திருப்பித் தராததால், நிதிநிறுவனம் அவர் மனைவியின் படக்களை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளது. இதனால் அந்த கணவன், மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jayashree A

திருமணமான இளைஞரொருவர் தான் வாங்கிய கடனைத்திருப்பித் தராததால், நிதிநிறுவனம் அவர் மனைவியின் படக்களை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளது. இதனால் அந்த கணவன், மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்..

ஒருபுறம் இணையம், சமூக வலைதளங்களின் பயன்பாடுகளால் நாளுக்கு நாள் பல்வேறு வளர்ச்சியையும் உயர்நிலையையும் அடைகிறது இந்தியா. ஆனால் அதேபோல மற்றொருபுறம் அதிகளவு குற்றங்களும் பெருகிவருகிறது என்பது மறுப்பதற்கில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நரேந்திரன். 25 வயதான இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் அகிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. நரேந்திரன் அப்பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன் நிலவிய மோசமான வானிலையால் அவரால் கடலுக்குச் செல்லமுடியவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த நரேந்திரன் லோன் ஆப் மூலம் ரூ. 2000 கடன் வாங்கியுள்ளார்.

சில வாரங்களுக்குப் பிறகு கடனை திருப்பிச் செலுத்தக்கோரி லோன் ஆப் ஏஜெண்டுகள் நரேந்திரனை மிரட்டத் தொடங்கியுள்ளனர். ஆனால் நரேந்திரனிடம் பணமில்லாததால் அவரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. கால அவகாசம் கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த ஆப் ஏஜெண்டுகள், நரேந்திரனின் மனைவியான அகிலாவின் புகைப்படத்தை ஆபாசபடமாக மார்பிங் செய்து நரேந்திரனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உறவினர்கள், நண்பர்கள் மூலம் இதையறிந்த நரேந்திரனும் அகிலாவும் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நரேந்திரன் கடந்த செவ்வாய்கிழமை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனை அடுத்து நரேந்திரனின் குடும்பத்தினர் போலீசிடம் புகார் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

ஆன்லைன் மோசடி, சைபர் மிரட்டல்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க, 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.