அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்து படிக்கும் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அதில், விசா கட்டுப்பாடும் ஒன்று.
இந்த நிலையில், அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என அந்நாட்டுத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் படிப்பைப் பாதியில் விட்டு இடைநிற்றல் அல்லது வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்லாமல் புறக்கணித்தல் அல்லது பள்ளி, கல்லூரி நிர்வாகத்துக்கு உரிய தகவல் தெரிவிக்காமல் தாங்கள் சேர்ந்துள்ள பட்டப்படிப்பிலிருந்து இடைநிற்றல் ஆகிய செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் விசா திரும்பப் பெறப்படும். மேலும், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குச் செல்வதற்கான எந்தவொரு விசாக்களையும் பெற முடியாத சூழல் உருவாகும்” என அது தெரிவித்துள்ளது. தூதரகத்தின் இந்த அறிக்கை, இந்திய மாணவர்களை பதற்றமடைய வைத்துள்ளது.