விஜயசாந்தி
விஜயசாந்தி file image
இந்தியா

பாஜக to காங்கிரஸ்: விஜயசாந்தி 2.0.. மீண்டும் அரசியலில் வெல்வாரா லேடி சூப்பர் ஸ்டார்!

யுவபுருஷ்

இதற்கு இடையில், பரபரப்பான அரசியல் சூழலில் பாஜகவில் இருந்து காங்கிரஸில் மீண்டும் இணைந்துள்ளார் விஜயசாந்தி. விஜயசாந்தியின் இந்த மாற்றம் ஏன் தேசிய அளவில் பேசப்படுகிறது. பாஜகவில் தொடங்கிய பயணம், தனிக்கட்சியாக மாறி, டிஆர்எஸ்ஸில் பயணித்து, மறுபடியும் பாஜகவுக்கு மாறியது எப்படி? பாஜகவில் இருந்து காங்கிரஸுக்கு சென்றது ஏன்? என்ற விஜயசாந்தியின் அரசியல் பயணத்தை திரும்பி பார்க்க முயல்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக...!

1979ம் ஆண்டு வெளியான கல்லுக்குள் ஈரம் என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் தனது 13வது வயதில் எண்ட்ரி கொடுத்த விஜயசாந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் 175 படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, 1992ம் ஆண்டு வெளியான மன்னன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர், சாந்தி தேவி பாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.

படத்தில் எதிர்மறை கதாபாத்திரமும் அவர்தான்.. நாயகியும் அவர்தான். இன்றளவும் படத்தின் காட்சிகள் பேசப்படுபவையாக இருந்து வருகின்றன. பல படங்களில் சண்டைக் காட்சிகள் அதகளப்படுத்தி இருப்பார். இப்படி, துணிச்சலான பாத்திரங்களை ஏற்று நடித்ததன் மூலம் நடிகைகளில் முக்கியமானவராக மாறினார் விஜயசாந்தி. ஒருகட்டத்திற்கு மேல், தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவே மாறியிருந்தார்.

சினிமா டூ அரசியல்

வெங்கையா நாயுடு மற்றும் வித்யாசாகர் ராவ் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி, 1998ம் ஆண்டு அரசியலில் குதித்தார் விஜயசாந்தி. தற்போது எந்த கட்சியிலிருந்து விலையுள்ளாரோ அந்த கட்சிதான், அரசியலில் அவருக்கு அரிச்சுவடியை கற்றுத்தந்தது. அத்வானிக்கு நெருக்கமாக இருந்ததால் கட்சியின் மகளிரணி செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, 1999ல் நடந்த பொதுத்தேர்தலில், தெலங்கானாவில் சோனியா காந்திக்கு எதிராக அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக விஜயசாந்தி அறிவிக்கப்பட்டார். ஆனால், சோனியா காந்தி பல்லாரி தொகுதிக்கு மாறி போட்டியிட்டதால், விஜயசாந்தி தேர்தல் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.

பாஜக டூ தனிக்கட்சி

ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து பிரித்து தெலங்கானாவை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற முழக்கம் அதிகரித்த காலகட்டம் அது. ஆம், இந்த முழக்கத்தை முன் வைத்து 2005ம் ஆண்டு தல்லி தெலங்கானா, அதாவது தாய் தெலங்கானா என்ற தனிக்கட்சி தொடங்கி அதிரடி காட்டினார் விஜயசாந்தி. ஆனால், எதிர்பார்த்தபடி அவரது கட்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதே காலகட்டத்தில்தான் தனித்தெலங்கானா முழக்கத்தை முன்வைத்து, டிஆர்எஸ் கட்சியும் போராடி வந்தது. அந்த சமயத்தில், தனி மாநிலம் அடைவதற்காக சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் உடன் இணைந்து பயணிக்கத்தயார் என்று அறிவித்த அவர், 2009ம் ஆண்டு கட்சியிலும் இணைந்தார். தனது கட்சியையும் டிஆர்எஸ் உடன் இணைத்துக்கொண்டார். அப்போது நடந்த பொதுத்தேர்தலிலும் டிஆர்எஸ் சார்பாக போட்டியிட்டு எம்.பி ஆனார் விஜயசாந்தி.

தெலங்கானா தனி மாநிலமாக உருமாறியபோது, அதுதொடர்பாக பாராளுமன்றத்தில் தனது குரலையும் பதித்திருந்தார் விஜயசாந்தி. அதனைத் தொடர்ந்து, 2013ம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி டிஆர் எஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட விஜயசாந்தி, 2014ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து, அப்போதைய சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் வேட்பாளராக மேடாக் தொகுதியில் போட்டியிட்ட அவர், எம்.எல்.ஆ சீட்டில் வெற்றிபெறாமல் தோல்வியையே சந்தித்தார். அதுதொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு பெரிய அரசியல் நடவடிக்கை இல்லை எனினும், 2018ம் ஆண்டு தெலங்கானா தேர்தலில் விஜயசாந்தியை முக்கிய பிரச்சார நிர்வாகியாகவும், ஆலோசகராகவும் நியமித்தார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் - பாஜக - காங்கிரஸ்

தொடர்ந்து, பாஜகவால் மட்டுமே சந்திரசேகர ராவின் டிஆர் எஸ் கட்சியை வீழ்த்த முடியும் என்று கடந்த 2020ம் ஆண்டு அமித்ஷா முன்னிலையில், தாய் கட்சியான பாஜகவில் இணைந்தார் விஜயசாந்தி. கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் உட்காரவைத்து அழகுபார்க்கப்பட்டார். ஆனால், தெலங்கானாவில் பாஜகவின் தலைமை மாறியதில் இருந்து தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக சமீபகாலமாக பேசப்பட்ட நிலையில், அதிரடியாக வெளியேறி காங்கிரஸில் இணைந்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில், கட்சியில் இணைந்த இவர், நவம்பர் 30ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் பிரச்சாரம் மற்றும் திட்டமிடல் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், இவரது அரசியல் பயணத்தின் அடுத்த அத்தியாயம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக உச்சம் தொட்ட இவர், இனி வரும் காலங்களில் அரசியலிலும் ஜொலிப்பாரா என்பதை பொருத்திருந்தே பார்க்கவேண்டும்.

- யுவபுருஷ்