cars and bikes pt web
இந்தியா

எல்லோரிடமும் சொந்த வாகனங்கள்.. 10 ஆண்டுகளில் நடந்த மாற்றம்... தரவுகள் சொல்வதென்ன?

வாகனங்களை சொந்தமாக வைத்திருப்பவர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறுகிவருகிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஒரு தொகுப்பைப் பார்க்கலாம்...

PT WEB

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மோட்டார் வாகனங்களின் உரிமையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் மேல்தட்டில் உள்ளவர்களின் வாகன உரிமம் 38.2% லிருந்து 69.7% ஆக உயர்ந்துள்ளது. கீழ்த்தட்டில் உள்ளவர்களின் வாகன உரிமம் 6.2% லிருந்து 47.1% ஆக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களிலும் இதேபோன்ற வளர்ச்சி காணப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களும் கார்களும் வைத்திருப்பவர்களைப் பொறுத்தவரை ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறுகிவருகிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. கிராமப்புறங்களில் 2011 - 2012ஆம் ஆண்டில் மேல்தட்டில் உள்ள 20 விழுக்காட்டினரில் 38.2 விழுக்காட்டினர் மோட்டார் வாகனங்களை வைத்திருந்தனர். இதுவே 2023 - 2024ஆம் ஆண்டில் 69.7 விழுக்காடாக அதிகரித்தது.

கிராமப்புறங்களில் கீழ்த்தட்டில் உள்ள 40 விழுக்காட்டினரில் 2011-2012ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்கள் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை 6.2 விழுக்காடு ஆகும். இதுவே, 2023 - 2024ஆம் ஆண்டில் பல மடங்கு அதிகரித்து 47 புள்ளி ஒன்றாக ஆனது.

நகர்ப் பகுதிகளில் 2011 - 2012ஆம் ஆண்டில் மேல்தட்டில் உள்ள 20 விழுக்காட்டினரில் 59.9 விழுக்காட்டினர் மோட்டார் வாகனங்கள் வைத்திருந்தனர். இதுவே, 2023 - 2024ஆம் ஆண்டில் 70.4 ஆக அதிகரித்தது. நகர்ப்புறங்களில் கீழ்த்தட்டில் உள்ள 40 விழுக்காட்டினரில் 19.7 சதவீதத்தினர் 2011 - 2012ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்களை வைத்திருந்தனர். இதுவே, 2023 - 2024ஆம் ஆண்டில் பல மடங்கு அதிகரித்து 60.4 ஆக ஆனது.

கிராமப்புறங்களில் கீழ்த்தட்டில் உள்ள 40 விழுக்காட்டினர் அதிகமாக மோட்டார் வாகனங்கள் வைத்திருக்கும் பட்டியலில் 76.6 விழுக்காட்டுடன் பஞ்சாப் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 69.1 விழுக்காட்டுடன் கர்நாடகா இருக்கிறது. தெலங்கானா 67.1 விழுக்காட்டுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. நகர்ப் பகுதிகளில் கீழ்த்தட்டில் உள்ள 40 விழுக்காட்டைப் பொறுத்தவரை மத்திய பிரதேசத்தில் 71.2 விழுக்காட்டினர் மோட்டார் வாகனங்கள் வைத்திருக்கின்றனர். இரண்டாம் இடத்தில் உத்தர பிரதேசம் 65.4 விழுக்காட்டைக் கொண்டிருக்கிறது. 64.7 விழுக்காட்டுடன் சத்தீஸ்கர் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.