இந்தியாவின் முக்கிய நகரங்களில் GOAT.. மெஸ்ஸியின் கால்பந்து பயணம்.. Small Rewind
நவீன கால்பந்தாட்டத்தின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, அர்ஜெண்டினாவின் முன்கள ஆட்டக்காரர். மயக்கக் கூடிய டிரிப்ளிங் திறனுக்காகவும் அபாரமான கோல் அடிக்கும் ஆற்றலுக்காகவும் அறியப்படுபவர் மெஸ்ஸி. தொழிற்சாலையில் பணியாற்றும் பெற்றோருக்கு, ஒரு சாதாரண குடும்ப பின்னணியில் பிறந்த மெஸ்ஸி அவருடைய நான்காவது வயதிலேயே கால்பந்து விளையாட ஆரம்பித்தவர். இளவயதிலேயே அபாரமான விளையாட்டுத் திறனைக் கொண்டிருந்தாலும், ஹார்மோன் பிரச்சினையால் ஆரோக்கிய குறைபாட்டை எதிர்கொண்டவர். கடும் சவால்களைத் தாண்டி வளர்ந்தவர்.
தனது தொழில் வாழ்க்கையின் பெரும் பகுதியை ‘எஃப்.சி. பார்சிலோனா அணி’ யில் செலவிட்ட மெஸ்ஸி அர்ஜெண்டினாவின் ஒரு தலைமுறை பிரதிநிதி என்று சொல்லலாம். ‘பலூன் டி’ ஓர்’ விருதை எட்டு முறை பெற்றவர் மெஸ்ஸி. கால்பந்தாட்ட வரலாற்றிலேயே அதிகமாக நாட்டுக்காகவும் தான் பங்கேற்ற அணிக்காகவும் 46 வெற்றி கோப்பைகள் பெற உறுதுணையாக இருந்தவர் மெஸ்ஸி.
ஒரு அணிக்காக அதிகபட்ச கோல்கள் அடித்த பெருமை மெஸ்ஸிக்கு உண்டு. பார்சிலோனாவுக்காக 672 கோல்களை அவர் அடித்திருக்கிறார். அதேபோல, அதிகபட்ச கோல் வாய்ப்பு உதவிகளை அளித்தவரும் மெஸ்ஸிதான். 400க்கும் மேற்பட்ட கோல்களை சகாக்கள் அடிப்பதற்கான வாய்ப்புகளை அவரு உருவாக்கியிருக்கிறார். 2022 உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றது, கால்பந்தாட்டத்தை ஒரு மதம்போல அணுகும் தென் அமெரிக்காவின் பொன்னான தருணங்களில் ஒன்று!
இவையெல்லாம் சேர்ந்துதான் மெஸ்ஸியை ஒரு குளோபல் ஐகான் ஆக்கியுள்ளன. விளம்பரச் சந்தையில் ஏனைய எல்லா விளையாட்டு வீரர்களையும் பின்னுக்குத்தள்ளி ‘அமெரிக்காவின் நம்பர் 1’ தரவரிசைக்கு மெஸ்ஸியை உயர்த்தியதும் மக்கள் செல்வாக்கே! ‘டிரான்ஸ்ஃபர் மார்க்கெட்’ தரவுகள்படி மெஸ்ஸியின் சந்தை மதிப்பு தோராயமாக ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுகிறது. இந்தப் பின்னணியிலேயே உலக நாடுகள் பலவும் மெஸ்ஸியை வரவேற்கின்றன. இந்திய ரசிகர்களும் மெஸ்ஸிக்காக அலைபாய்கின்றனர்.

