கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்த நிலையில், முதல்வர் பதவியை யார் ஏற்க வேண்டும் என்ற இழுபறி நீண்டது. இறுதியில் 25 ஆண்டுகள் சட்டமன்ற அனுபவம் கொண்ட, எதிர்க்கட்சித் தலைவராக இடதுசாரிகளுக்கு எதிராக களத்தை மாற்றிய விடி சதீசன், தேசிய தலைமையால் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. குறிப்பாக, காங்கிரஸ் 63 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 22 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம், இடது பினராயி விஜயன் தலைமையிலான ஜனநாயக முன்னணி கூட்டணியின் பத்தாண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கட்டிலை பிடித்த காங்கிரஸில், முதல்வர் யார் என்ற குழப்பம் தொடர்ந்து வந்தது. எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலிய 3 பேருக்கு இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நீடித்தது.
இந்தசூழலில் தான் நீண்டஇழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விடி சதீசன் முதல்வராக காங்கிரஸ் தேசிய தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடி சதீசன் 25 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிவருகிறார். எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயலாற்றிய அவர், இடதுசாரிகளுக்கு எதிராக களத்தை மாற்றி கடந்த 5 ஆண்டுகளாக கட்டமைத்ததற்காக மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளார். இவர் தற்பாது எர்ணாகுளம் மாவட்டம் பரவூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
கேரளா சட்டசபையில் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வந்த இவருக்கு, கட்சித் தொண்டர்களின் ஆதரவும் பிரதான கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ஆதரவும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் கூட நேனமாரா, காழக்கூட்டம், வடகாஞ்சேரி, நெடுமங்காடு மற்றும் சேர்த்தலா ஆகிய தொகுதிகளில் வேணுகோபால் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களுக்குப் பதிலாக, தான் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால், கட்சிக்கு இன்னும் அதிகமான இடங்களைப் பெற்றுத் தந்திருக்க முடியும் என்று சதீசன் கட்சித் தலைமையிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் முதலமைச்சராக வேணுகோபால் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக பரவிய செய்திக்கு பின், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது அவருக்கு எந்தளவு ஆதரவு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியது. இந்தசூழலில் தான் ’மக்களின் வேட்பாளர்’ என பாராட்டப்படும் விடி சதீசன் முதல்வராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.