திருமாவளவன் pt web
இந்தியா

“ஈகோ பிரச்னையை தள்ளிவைத்துவிட்டு..” டெல்லி தேர்தல் முடிவுகள் தொடர்பாக திருமாவளவன்

“தங்களின் ஈகோ பிரச்னைகளை கட்சிகள் பின்னுக்குத் தள்ளிவைத்துவிட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவதற்கான வழியில் சிந்திக்க வேண்டும்” - விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்,

அங்கேஷ்வர்

டெல்லியில் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஐந்தாம் தேதி நடந்த தேர்தலில் 60.42 சதவிகித வாக்குகள் பதிவாகின. தேர்தலில் மும்முனை போட்டியாக இருந்தாலும் ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 11 மணி நிலவரப்படி, பாஜக 43 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 27 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில், “டெல்லியில் பாஜக முன்னிலையில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆம் ஆத்மி இந்தளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை. INDIA கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. தங்களின் ஈகோ பிரச்னைகளை கட்சிகள் பின்னுக்குத் தள்ளிவைத்துவிட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவதற்கான வழியில் சிந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “இப்போதுதான் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கண்டிப்பாக பாஜக வெற்றிபெற வாய்ப்புகள் இல்லையென்றுதான் நாங்கள் கருதுகிறோம். ஏனென்றால் தேர்தல் ஆணையம், வருவாய் துறை, காவல்துறை என அனைத்தையும் கைகளில் வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கிறார்கள். ராகுல்காந்தி சொல்வதுபோல், மகாராஷ்டிராவில் மக்கள் தொகைக்கு மேல் வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். அண்டை மாநிலங்களில் இருப்பவர்களையெல்லாம் வாக்காளர்களாக சேர்த்துள்ளார்கள் என புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க பாஜக சொல்வதைக் கேட்கிறது. அந்த நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறது. டெல்லியில் எங்களது கட்சி வலிமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இன்னும் வலிமைப்படுத்த வேண்டும். நேர்மையாக தேர்தல் நடந்தால் காங்கிரஸ் வெற்றி பெறும். நேர்மையற்ற தேர்தல் என்பதால் வெற்றி வாய்ப்பை காங்கிரஸ் இழக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். நல்லாட்சிக்கு வெகுமதியை ஈரோடு மக்கள் கொடுத்துள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.