செய்தியாளர் ராஜ்குமார்
மகாதேவர் கோவில் வீதிகளில் ஒரு பிரிவினரை அனுமதிக்காமல் தீண்டாமை கடைபிடித்ததால் வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர், தந்தை பெரியார். அதற்காக பெரியார் அப்போது கைதும் செய்யப்பட்டார். தொடர்ந்து 74 நாட்கள் சிறையில் இருந்து கொடுமைகளை அனுபவித்தார். ஆயினும் போராட்டத்தை அவர் கைவிடவில்லை. இறுதியில், மகாத்மா காந்தி தலையிட்டு பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மகாதேவர் கோயில் வீதிகளில் அனைத்து தரப்பினரும் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு வைக்கம் போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது.
இத்தகைய வரலாற்றினைக் கொண்ட வைக்கம் போராட்டம் 100 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அத்தகைய போராட்டங்களை நினைவு கூறும் விதமாகத்தான் கேரளாவில் ‘வைக்கம் கோயில் நுழைவு போராட்டத்தின் 100ஆவது ஆண்டு விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றுள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கப்பட்டது. நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
முன்னதாக, ரூ. 8.14 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரியார் உருவப் படத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பெரியார் நினைவகத்தில் பெரியார் சிலை, புகைப்படங்களின் வரலாறு, நூலகம், பூங்கா போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. நூலகத்தில் பெரியார் எழுதிய புத்தகங்கள் மற்றும் பெரியாரின் பங்களிப்பு குறித்து பல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2024 ம் ஆண்டுக்கான வைக்கம் விருதை தமிழக அரசு சார்பில் சமூக ஆர்வலர், எழுத்தாளர் தேவநூர மகாதேவாவுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். அரசு சார்பில் ஐந்து லட்சம் வழங்கப்படுகிறது. அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன் தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் இருந்து தி.க. தலைவர் வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்...