சிவகங்கை: உயர்தர கற்றல் வகுப்புகளுடன் கவனம் ஈர்க்கும் கருவியப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி!
செய்தியாளர்: நைனா முகம்மது
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் அருகே, கருவியப்பட்டி கிராமத்தில், தமிழக அரசின் ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தின் படி, ஊராட்சி மன்ற தொடக்கப்பள்ளியானது வண்ணமயமான வகுப்பறைகள், உயர்தர கற்றல் மற்றும் வாசிப்பு திறன், தூய்மை மிகுந்த சுற்றுச்சூழலைக்கொண்டு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம், மற்றும் கணிதம் உட்பட உயர்தர கல்வி முறையை கற்பிக்கும் ஆசிரியர்களுடன் கூடி காட்சியளிக்கிறது. கவனம் ஈர்க்கும் இப்பள்ளியின் சிறப்பம்சங்கள், இங்கே...
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வடகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கருவியப்பட்டி கிராமத்தில் உள்ளது இந்த தொடக்கப்பள்ளி. இன்றைய சூழ்நிலையில் தங்களது குழந்தைகளின் உயர்தரமான கல்விக்காக தனியார் பள்ளிகளை தேடி ஓடும் பெற்றோர்கள் மத்தியில், தனியார் பள்ளிகளின் தரத்திற்கு சற்றும் குறையாத வண்ணம், வியக்க வைக்கும் நவீன செயல்பாடுகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கருவியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியானது இரண்டு ஆசிரியைகள், 25 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொண்டு இயங்கி வருகிறது. இத்தொடக்கப்பள்ளி தனது புதுமையான கற்றல் முறைகளினால் தலைநிமிர்ந்து நிற்கிறது.
கல்வி பயிலும் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையின் அடிப்படை ஆதார கல்விகளான அறிவியல், கணிதப் பாடங்கள் மிகவும் சிறப்பாக பல்வேறு வடிவங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு மாணாக்கர்களின் கற்றல் இடைவெளியை ஈடு செய்யும் பொருட்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் அறிமுகமானதில் இருந்து கற்பித்தலை மேம்படுத்துவதற்காக தமிழக அரசினால் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட "எண்ணும், எழுத்தும்" என்ற கல்வியை அடிப்படையாகக் கொண்டு கதைகள், பாடல்கள், விளையாட்டுக்கள், புதிர்கள், கைவினைப் பொருட்கள், பரிசோதனைகள் என்று இப்பள்ளியின் வகுப்பறைகள் வண்ணமயமாக காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசின் பங்களிப்பு ஒருபுறம், பணி புரியும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஒருபுறம் என இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கல்வித்தரம் மிகவும் சிறப்பாக நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
எந்த ஒரு கடினமான பாடத்திட்டமாக இருந்தாலும் எளிமையாகவும், புதுமையான செயல்முறைகளின் மூலமாகவும் கற்பிப்பது மாணவர்களின் கற்றல் திறனை உயர்த்தும் என்பதற்கு இந்த அரசு பள்ளி மிகச் சிறந்த சான்றாகும்.
இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படும் முறை மிக எளிதாகவும் நுட்பமாகவும் ஆசிரியர்களை கொண்டு போதிக்கப்படுவதால் அவர்கள் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் சிறந்து விளங்குவதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
பள்ளத்தூர், வடகுடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தற்போது பயின்று வரும் நிலையில் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் செயல்பாடுகள், பணிபுரியும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு பெற்றோர்கள் மத்தியில் நற்பெயரை பெற்று வருவதன் காரணமாக தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் கல்வி பயில பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது இப்பள்ளிக்கு கிடைத்த சிறப்பு வாய்ந்த வெற்றியாகும்.
இப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வியோடு பொது அறிவு, உலகம் சார்ந்த இன்றைய சூழ்நிலைகளை அறிந்து கொள்ளும் வகையில் கல்விமுறை போதிக்கப்படுகின்றன. அரசு பள்ளிகள் என்றாலே தயக்கம் காட்டி, தனியார் பள்ளிகளே உயர்ந்தது என்று பெற்றோர்கள் நினைக்கக்கூடிய இன்றைய காலகட்டத்தில் கருவியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தரமான வகுப்பறைகள், தரமான கல்வி முறைகளை போதிக்கக்கூடிய ஆரம்பப்பள்ளிகள் பெருகி வருகின்ற காரணத்தினால் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தயக்கம் இன்றி பெருமிதத்துடன் சேர்க்கக் கூடியகாலம் கனிந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.