உத்தரப்பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர், உள்ளூர்வாசி வீரேஷ் என்பவரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இரண்டு கிராமவாசிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, குற்றமசாட்டப்பட்டவர் சாதிரீதியாக திட்டிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில், உள்ளூர் அதிகாரிகள் FIR பதிவு செய்ய மறுத்துவிட்ட காரணத்தால், அவர் POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளார்.
எனினும், குற்றச்சாட்டுகளின் தீவிரம் இருந்தபோதிலும், ஆதாரங்கள் இல்லாததைக் காரணம் காட்டி, டிசம்பர் 30, 2024 அன்று காவல்துறை இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 27ஆம் தேதி சிறுமியின் தந்தை எதிர்ப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘விசாரணை அதிகாரி முக்கியமான நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யத் தவறிவிட்டார் என்றும், தாக்குதல் குறித்த சிறுமியின் சொந்தக் கணக்கை கவனிக்கவில்லை’ என்றும் எடுத்துக்காட்டினார்.
குறிப்பாக, விசாரணை அதிகாரி குற்றம்சாட்டப்பட்டவரின் கடையிலிருந்து ஆறு சமோசாக்களை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, பின்னர் தவறான மற்றும் அலட்சியமான அறிக்கையை தாக்கல் செய்ததாகக் கூறப்படும் கூற்றை எதிர்ப்பு மனு கவனத்தில் கொண்டது. அதேநேரத்தில், அந்தச் சிறுமி கடனுக்கு சமோசா கேட்டதாகவும், மறுக்கப்பட்டதால், பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கை ஜோடித்ததாகவும் எஃப்.ஆரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூற்றை நீதிபதி நரேந்திர பால் ராணா தலைமையிலான சிறப்பு போக்சோ நீதிமன்றம், இறுதி அறிக்கையை ரத்து செய்து, வழக்கை ஒரு புகாராகத் தொடர உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல்துறையின் செல்வாக்கு இல்லாமல் நீதித்துறையே இந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.