இக்ரா ஹசன், ராணா எக்ஸ் தளம்
இந்தியா

உ.பி.| சமாஜ்வாதி முஸ்லிம் பெண் எம்.பி. குறித்து சர்ச்சை.. கர்னி சேனா தலைவர் மீது வழக்குப்பதிவு!

உத்தரப்பிரதேச சமாஜ்வாதி எம்பி இக்ரா ஹசன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்தாக கர்னி சேனா தலைவர் யோகேந்திர சிங் ராணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தின் கர்னி சேனா அமைப்பைச் சேர்ந்தவர், யோகேந்திர சிங் ராணா. இவர், அம்மாநிலத்தின் கைரானா தொகுதி சமாஜ்வாதி எம்பி இக்ரா ஹசன் பற்றி சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், ”கைரானா எம்.பி. இக்ரா ஹசன் இன்னும் திருமணமாகாதவர். அவரைவிட, நான் ஒன்றும் குறைவான அழகுடையவன் இல்லை. எனக்கு நல்ல வீடும், சொத்துக்களும் உள்ளன.

இக்ரா ஹசன்

நான் என் மனைவியிடமும் அனுமதி வாங்கிவிட்டேன். மொராதாபாத்தில் எனக்கு நிறைய வீடுகள் உள்ளன. இக்ரா விரும்பினால் என்னை திருமணம் செய்துகொள்ளலாம். நான், அவரை என் வீட்டில் தொழுகை நடத்த அனுமதிக்கிறேன். ஆனால், அசாதுதீன் ஒவைசி மற்றும் அக்பருதீன் ஒவைசி என்னை 'மச்சான்' என்று அழைக்க வேண்டும். இக்ரா ஹசனுடனான திருமணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், அவரும் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்" எனப் பேசியிருந்தார். அவருடைய இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வைரலானதுடன், விவாதத்தையும் ஏற்படுத்தியது. அதேநேரத்தில், எதிர்ப்பும் கிளம்பியது.

பல முஸ்லிம் தலைவர்களும் அமைப்புகளும் ராணா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி. எஸ்.டி. ஹசன், "இக்ராவுக்கு மட்டுமல்ல, இது முழு முஸ்லிம் சமூகத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் அவமானம். இந்த விவகாரத்தில் அரசாங்கமும் நிர்வாகமும் மௌனம் காத்து வருகிறது. ஆகையால், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இக்ரா ஹசன், ராணா

இதையடுத்து அடுத்த 2 மணி நேரத்தில், அந்த வீடியோவை தனது வலைத்தளத்தில் இருந்து நீக்கிவிட்டார். ஆனாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத ராணா, "சிறையில் அடைக்கப்பட்டாலும் அல்லது தூக்கிலிடப்பட்டாலும்கூட, இதிலிருந்து பின்வாங்க மாட்டேன்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கறிஞர் சுனிதா சிங், “ராணாவின் கருத்துகள் மிகவும் அவமானகரமானவை, ஒரு பொது பிரதிநிதியின் கண்ணியத்திற்கு சேதம் விளைவிப்பவை. இது ஒரு பெண்ணின் கண்ணியத்திற்கு மட்டுமல்ல, சமூக நல்லிணக்கத்திற்கும் அவமானம்” எனத் தெரிவித்த அவர், ராணா மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மொராதாபாத்தில் உள்ள கட்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ராணா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக எஸ்பி (நகரம்) குமார் ரன்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.