இன்றைய அறிவியல் உலகு, விரல் நுனியில் இருப்பதாகப் பலரால் கூறப்பட்டாலும், அதற்கேற்றபடி போலிகளும் அதிகரித்து வருவதுதான் வியப்பான ஒன்றாக உள்ளது. ஆன்லைன், டிஜிட்டல் உள்ளிட்டவற்றைத் தவிர்த்து நிஜ உலகிலும் போலிகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் நம் நாட்டில், போலியாக ஒரு காவல் நிலையம், சுங்கச்சாவடி, வேலைவாய்ப்பு மையம், நீதிமன்றம் செயல்பட்டதாகக் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஒரு நாட்டிற்கு தூதரகம் அமைத்து, அதற்கு தன்னை தூதராக அறிவித்து மோசடியில் ஈடுபட்ட ஒருவரைப் பற்றிய செய்திதான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் ஜெயின் ஓர் ஆடம்பரமான இரண்டு மாடி கட்டடத்தை வாடகைக்கு எடுத்து, அதற்கு வெளியே ‘கிராண்ட் டச்சி ஆஃப் வெஸ்டார்டிகா’ மற்றும் ’HEHV ஜெயின் கௌரவ தூதர்’ என்று எழுதப்பட்ட ஒரு பெயர் பலகைகளுடன் நான்கு கார்களுடன், ஒரு நாட்டிற்கு தூதரகம் அமைத்துள்ளார். அதாவது, இந்த வளாத்தில் இந்தியா மற்றும் உலகின் எந்த இறையாண்மை கொண்ட நாட்டாலும் அங்கீகரிக்கப்படாத அண்டார்டிகாவில் உள்ள ஒரு மைக்ரோநேஷனான வெஸ்டார்டிகாவின் கொடிகள் இருந்துள்ளன.
ஹர்ஷ்வர்தன் ஜெயின் இந்த பிராந்தியத்தின் பெயரில் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நாட்டில் வேலை வழங்குவதாக இளைஞர்களை நம்ப வைத்துள்ளார். எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருக்க, விலையுயர்ந்த கார்கள், தூதரக பாஸ்போர்ட்டுகள், வெளிநாட்டு நாணயம் மற்றும் நாட்டின் முக்கியத் தலைவர்களுடன் போலி புகைப்படங்களில் தூதரக ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளார்.
மேலும் இதற்காக குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பிற முக்கியத் தலைவர்களுடன் இருக்கும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களையும் வைத்திருந்துள்ளார்.
இந்தநிலையில்தான் பணமோசடி நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில் அவர் தூதரக புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை அடுத்து, அவரது செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.
ஹவாலா மூலம் பணமோசடி மோசடியில் ஈடுபட்டதாகவும், போலியான இராஜதந்திர ஆவணங்களைத் தயாரித்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரிடமிருந்து 12 பாஸ்போர்ட்டுகள், வெளியுறவுத்துறை முத்திரைகள் பதித்த கோப்புகள், 34 நாடுகளின் முத்திரைகள், ரூ.44 லட்சம் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தப் போலி தூதரகம் 2017 முதல் இயங்கி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்துவதற்காக தூதரகத்திற்கு வெளியே பந்தாராக்கள் (சமூக விருந்து) உள்ளிட்ட தொண்டு நிகழ்வுகளை ஜெயின் ஏற்பாடு செய்வார் எனக் கூறப்படுகிறது.