uttarpradesh  x page
இந்தியா

1 லிட்டர் ரசானயம் மூலம் 500 லிட்டர் பால் உற்பத்தி.. உ.பி.யில் 20 ஆண்டுகளாக மோசடி செய்த நபர் கைது!

1 லிட்டர் ரசாயனம் மூலம் 500 லிட்டர் செயற்கை பால் தயாரித்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் பாலும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் இந்தப் பாலில்கூட திருட்டு, ஊழல் என ஒருபுறம் இருக்க, மறுபுறம் கலப்படங்களும் அதிகரித்து வருகின்றன. சில இடங்களில் பாலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதை நாமே அறிந்திருப்போம். ஆனால், இங்கே ஒருவர், 20 ஆண்டுகளாக ரசாயனத்தைக் கலந்து பாலை விற்பனை செய்து வந்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரைச் சேர்ந்தவர், அஜய் அகர்வால். இவர், அகர்வால் டிரேடர்ஸ் என்ற பெயரில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பால் பொருள் தயாரிப்பு ஆலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான், உணவுத் தரக்கட்டுப்பாட்டுத் துறை உத்தரப்பிரதேசத்தில் பால் விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போதுதான் இவருடைய ஆலையை ஆய்வுசெய்தபோது அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர்.

காரணம் இந்த ஆய்வின்போது, அவர் வெறும் 1 லிட்டர் ரசாயனத்தில் 500 லிட்டர் போலி பால் தயாரித்து விற்பனை செய்துவந்ததைக் கண்டுபிடித்தனர். அதாவது, வெள்ளை நிறத்தில் ரசாயனத்தைக் கொண்டு செயற்கை பால் தயாரித்து, அதனுடன் சுவை மற்றும் மணத்தைக் கூட்டும் சில ரசாயனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அவை சேர்ந்ததும் பால் போன்ற சுவையுடன் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாக இருந்துள்ளது.

இதனால் மக்களுக்கு பாலின் மீது எந்தவித சந்தேகமும் வரவில்லை. இதில் என்னென்ன ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன என்பது இதுவரை வெளிவரவில்லை. இதேபோல் பன்னீரும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அஜய் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் இதுகுறித்து போலீசாரும், உணவுத் துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரது ஆலையில், பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனங்களில் காஸ்டிக் பொட்டாஷ், மோர் பவுடர், சர்பிடால், பால் பெர்மீட் பவுடர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயா கொழுப்புகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து FSSAIஇன் அதிகாரியான வினித் சக்சேனா, “கடந்த 6 மாதங்களில் அவர் இந்த பால் பொருட்களை எங்கெங்கெல்லாம் விநியோகித்தார் என்பதையும் நாங்கள் விசாரித்து வருகிறோம். அவர்களிடம் பால் வாங்கியவர்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.