உ.பியில், ஆறு புதிய நபர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க ஆதித்யநாத் அரசு முன்வந்திருக்கிறது. அவர்களில், பூபேந்திர சௌத்ரி, மனோஜ் பாண்டே, பூஜா பால், ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மா மற்றும் கிருஷ்ண பஸ்வான் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. மேலும், தனிப் பொறுப்பு வகிக்கும் ஓர் இணை அமைச்சர், அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைத் தக்கவைத்திருக்கும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, வரும் தேர்தலுக்காக சில மாற்றங்களைச் செய்யவுள்ளது. அதன்படி, ஆறு பேர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க இருக்கிறது. அவர்களில், பூபேந்திர சௌத்ரி, மனோஜ் பாண்டே, பூஜா பால், ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மா மற்றும் கிருஷ்ண பஸ்வான் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. மேலும், தனிப் பொறுப்பு வகிக்கும் ஓர் இணை அமைச்சர், அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், உத்தரப் பிரதேச பாஜகவின் முன்னாள் தலைவரும், தற்போது சட்டசபை மேலவை உறுப்பினருமான (எம்.எல்.சி) பூபேந்திர சௌத்ரி, மொராதாபாத்தைச் சேர்ந்த ஜாட் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவராக அறியப்படுகிறார். அடுத்து, ரேபரேலியின் உஞ்சாஹர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரால உள்ள மனோஜ் பாண்டே, பிராமணத் தலைவராக அறியப்படுகிறார்.
அடுத்து, பால் சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவரும், கௌசாம்பியில் உள்ள சாயல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பூஜா பாலுக்கும், குர்ஜார் ஓபிசி தலைவரும் பிஜ்னோர் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான அசோக் கட்டாரியாவுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பாசி சமூகத்தைச் சேர்ந்த ஃபதேபூர் மாவட்டம் காகா தொகுதியின் பட்டியல் சாதித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண பஸ்வான் மற்றும் அமேதி மாவட்டம் ஜகதீஷ்பூர் தொகுதியின் பாசி சமூகத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சுரேஷ் பாசி ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்க இருக்கிறது.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில், தற்போது பாஜக 255 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக சந்தித்த இந்த பின்னடைவுக்குப் பிறகு, மாற்றத்தை விதைக்க அக்கட்சி விரும்புகிறது. அதனடிப்படையிலேயே இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. 2017 முதல் ஆட்சியில் இருக்கும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக, கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட முதல் கட்சி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.