model image x page
இந்தியா

உத்தரகாண்ட் | லிவ்-இன் உறவு கட்டாயப் பதிவு ”இது எப்படி தனியுரிமை மீறல்?” - உயர்நீதிமன்றம் கருத்து

’’பொது சிவில் சட்டத்தின்படி, லிவ்-இன் உறவை அரசிடம் பதிவுசெய்வது மட்டும் எப்படி தனியுரிமை மீறலாகும்” என உத்தரகாண்ட் உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Prakash J

பாஜகவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருப்பது, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம். திருமணம், வாரிசுரிமை, விவாகரத்து உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்றுவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கமாகும். மேலும், இந்தச் சட்டம், நேரடி உறவுகளிலிருந்து பிறக்கும் குழந்தைகளை, தம்பதியின் சட்டப்பூர்வமான குழந்தை என்று அங்கீகரிக்கிறது மற்றும் அவர்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்கிறது.

இதை, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. எனினும், இந்தச் சட்டத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர, மற்ற ஆட்சியாளர்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில், பாஜக ஆளும் உத்தரகாண்டில் நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் கடந்த ஜனவரி 27ஆம் தேதி அமலுக்கு வந்தது.

உத்தரகாண்ட்

உத்தராகண்டில் அமலுக்கு வந்த இச்சட்டத்தின்படி, Live in relationship எனப்படும் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வோர், தங்கள் உறவு குறித்து பதிவு செய்ய வேண்டும் என்ற அம்சமும் இடம்பெற்றுள்ளது. பொது சிவில் சட்டத்தின்படி, திருமணம், விவாகரத்து, லிவ்-இன் உறவு, அந்த உறவு முறிவு ஆகியவற்றை அரசிடம் பதிவு செய்வது கட்டாயமாகும். ‘லிவ்-இன்’ உறவைத் தொடங்கிய ஒரு மாதத்துக்குள் அரசிடம் பதிவு செய்யத் தவறினாலோ அல்லது தவறான தகவல்களை வழங்கினாலோ மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பதிவு செய்வதில் ஒரு மாதம் தாமதம் ஏற்பட்டால் கூட, மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த நிலையில், பொது சிவில் சட்டத்தின்படி, ‘லிவ்-இன்’ உறவு தனியுரிமையைப் பறிப்பதாக கூறி, உத்தரகண்ட் உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு கடந்த 17ஆம் தேதி தலைமை நீதிபதி ஜி. நரேந்தர் மற்றும் நீதிபதி அலோக் மஹ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

உத்தரகாண்ட்

அப்போது நீதிபதிகள், ”நீங்கள் (மனுதாரா்) ஒரு சமூகத்தில் வாழ்கிறீா்கள். தொலைதூர காட்டில் உள்ள ஒரு குகையில் அல்ல. அண்டை வீட்டாா் முதல் மொத்த சமூகத்தினரும் அறியும் வகையில் திருமணம் செய்துகொள்ளாமல் வெளிப்படையாக வாழ்கிறீா்கள். அப்படியிருக்கையில், அரசிடம் பதிவுசெய்வது மட்டும் எப்படி தனியுரிமை மீறலாகும். மாநில அரசு, நேரடி உறவுகளைத் தடை செய்யவில்லை. மாறாக, அவற்றைப் பதிவு செய்வதற்கு மட்டுமே உத்தரவிடுகிறது” என அறுவுறுத்தியுள்ளனர்.