கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி தராலி என்ற கிராமம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. பாதிக்கும் மேற்பட்ட கிராமம் மண்ணில் புதைந்த நிலையில், இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 49 பேர் காணாமல்போயுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மோப்ப நாய் உதவியுடன், இந்த பணிகளில் ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். கிரேன்கள் உதவியுடன், மணல் அகற்றப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக உத்தராகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதில், அணுக முடியாத இடத்தில் இருந்து 177 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாட்களாக உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவித்தவர்களுக்கு விரைந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
கங்கோத்ரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தராலி மற்றும் ஹர்ஷில் இடையிலான சாலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாலம் இடிந்து சேதமடைந்திருந்தது. இதையடுத்து, ராணுவம் மற்றும் எல்லை சாலைகள் அமைப்பினர் இணைந்து, அந்த பகுதியில் 90 அடி நீளத்தில் இரும்பு பாலத்தை கட்டமைத்துள்ளனர். இதையடுத்து, அந்த பகுதியில் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இயல்பு நிலை படிப்படியாக திரும்பிவரும் நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த ஹர்ஷில் பள்ளத்தாக்கில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அனுப்பி வைத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உணவு, உடைகள், போர்வைகள், காலணிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு வாகனங்கள் எளிதில் சென்றுவர முடியாததால், சாலைகள் சீரமைக்கப்படும் வரை, குதிரைகள் மற்றும் கழுதைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.