உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் தரைப் பகுதிகள் முழுவதும் சேற்றில் புதைந்துள்ளன. இதனால், மீட்புப் பணிகள் மிகவும் சவாலாக உள்ளன. இந்த நிலையில், மீட்புப் படையினர் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திச் சேதமடைந்த பகுதிகளில் சிக்கியவர்களைத் தேடி வருகின்றனர். இந்த மீட்புப் பணியில் தரை ஊடுருவும் ரேடார், VLC கேமரா மற்றும் வெப்பப் படக் கேமரா (Thermal Imaging Camera) போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. GPR கருவி, ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி சேற்றில் புதைந்துள்ள மனிதர்கள், வாகனங்களைக் கண்டறிய உதவுகிறது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை நேரடியாகப் பார்க்கவும், அவர்களுடன் பேசவும் VLC கருவி உதவுகிறது. இருட்டிலும் சேற்றிலும் சிக்கியுள்ள மனிதர்களை அவர்களது உடல் வெப்பத்தின் மூலம் கண்டறிய Thermal Imaging Camera பயன்படுகிறது. இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்கள், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி, உயிர் சேதங்களைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உத்தரகாசியில் ஏற்பட்ட இந்த மேக வெடிப்புக்கு, கடந்த பல ஆண்டுகளாக வெட்டப்பட்டு வரும் தேவதாரு (DEODAR) மரங்களே முக்கியக் காரணம் என்று விஞ்ஞானிகளும் அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டுகின்றனர். தேவதாரு மரங்கள் மண் அரிப்பைத் தடுப்பதிலும், கனமழை அல்லது நிலச்சரிவு ஏற்படும்போது வெள்ளத்தின் வேகத்தைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அதன் அடர்த்தியான வேர்கள் மண்ணைப் பிணைத்து வைத்திருப்பதால், வெள்ளம் மற்றும் சேதங்கள் குறையும் என்று கூறப்படுகிறது. தேவதாரு மரங்கள் அதிகமாக இருந்திருந்தால், இந்த மேகவெடிப்பு பாதிப்பு மிகவும் குறைந்திருக்கும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர்.