செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 26 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 17,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாநில நிவாரண ஆணையர் அலுவலக தகவலின்படி, 3 லட்சத்து 53 ஆயிரம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1,312 நிவாரண முகாம்கள், 1,634 வெள்ள கண்காணிப்பு மையங்கள், 1,697 படகுகள் மற்றும் மோட்டார் படகுகள், 1,068 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 72,897 உணவு நிவாரணப் பொட்டலங்கள், 3 லட்சத்து 67 ஆயிரம் மதிய உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார நடவடிக்கையாக 5 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளோரின் மாத்திரைகள் மற்றும் ஒரு லட்சத்து 87 ஆயிரம் ORS பாக்கெட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கால்நடைகளுக்கு 5,000 குவிண்டாலுக்கும் அதிகமான தீவனமும் வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் மந்தாகினி ஆற்றின் நீர்மட்டம் ஆகஸ்ட் 29-ம் தேதி 135.20 மீட்டராக உயர்ந்த நிலையில், தற்போது 128 மீட்டராக குறைந்துள்ளது. எனினும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 688 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்; 36 கிராமங்களைச் சேர்ந்த 13,906 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
காசிப்பூரில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால், துஹியா சரையா அருகே தீவில் சிக்கியிருந்த 12 பேர் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட செம்மறியாடுகளை போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சுமார் 6 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்டனர். சிக்கியவர்களை கண்டறிய இரவு நேரத்தில் இரவு பார்வை வசதியுள்ள ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
உத்தர பிரதேச வெள்ளத்தில் உயிர்ச்சேதம் அல்லது கால்நடை உயிரிழப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 4,847 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடும் சவால்களுக்கு இடையே மீட்புப் பணிகள் தொடர்கின்றன.