Goldy Brar ANI
இந்தியா

Most Wanted பட்டியல்.. இடம்பிடித்துள்ள இந்தியர்.. பரிசுத் தொகை அறிவித்துள்ள அமெரிக்கா!

கோல்டி பிரார் FBI-யின் Top Ten Most Wanted பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது, இந்தியாவைத் தாண்டி செயல்படும் குற்ற மற்றும் பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

பஞ்சாபைச் சேர்ந்த சதிந்தர்ஜித் சிங் என்றழைக்கப்படும் கோல்டி பிரார், அமெரிக்காவின் FBI அமைப்பின் Ten Most Wanted Fugitives பட்டியலில் இடம்பெற்றுள்ளார். செப்டம்பர் 28, 2026 அன்று FBI வெளியிட்ட அறிவிப்பின்படி, கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்பொருள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு கூட்டாட்சி குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் தேடப்பட்டு வருகிறார். அவரைப் பற்றிய தகவல் அளித்து கைது செய்ய உதவுபவர்களுக்கு அதிகபட்சமாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

goldy brar

FBI வெளியிட்ட தகவல்படி, கோல்டி பிரார் அமெரிக்கா மற்றும் கனடாவில் செயல்படுவதாகக் கூறப்படும் Lawrence Bishnoi Organized Crime Group உடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளார். குறிவைத்து நடத்தப்பட்ட கொலைகள், துப்பாக்கிச்சூடு, கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் அந்த அமைப்பு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கோல்டி பிரார் மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் UAPA பட்டியலில் Satinder Singh @ Satinderjit Singh @ Goldy Brar 56-ஆவது நபராக இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகள்

கோல்டி பிராரைத் தவிர, இந்திய அரசின் UAPA சட்டத்தின் கீழ் தனிநபர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட பலரும் சர்வதேச அளவில் கவனம் பெற்றவர்கள்.

மசூத் அசார்- ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனர் மற்றும் முக்கியத் தலைவராக இந்திய அரசு குறிப்பிடும் மசூத் அசார், UAPA-வின் கீழ் தனிநபர் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே பட்டியலில் ஹாஃபிஸ் சயீத் மற்றும் ஜாகி-உர்-ரஹ்மான் லக்வி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Masood azhar

தாவூத் இப்ராஹிம் — 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடையதாக இந்திய அரசால் குறிப்பிடப்படும் தாவூத் இப்ராஹிமும் UAPA-வின் நான்காவது அட்டவணையில் தனிநபர் பயங்கரவாதியாக இடம்பெற்றுள்ளார்.

இந்திய அரசின் பட்டியலில் வத்வா சிங் பாபர், லக்பீர் சிங் ரோடே, ரஞ்ஜீத் சிங் நீடா, பூபிந்தர் சிங் பிண்டா, குர்பத்வந்த் சிங் பன்னூன், பரம்பீர் சிங் பம்மா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படும் பல அமைப்புகளும் இந்தியாவின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் உள்ளன.

Dawood ibrahim

குறிப்பாக, Babbar Khalsa International, Khalistan Commando Force, Khalistan Zindabad Force மற்றும் Khalistan Liberation Force உள்ளிட்ட அமைப்புகள் UAPA-வின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கோல்டி பிரார் FBI-யின் Top Ten Most Wanted பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது, இந்தியாவைத் தாண்டி செயல்படும் குற்ற மற்றும் பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.