உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவின் நவிபூர் கிராமத்திற்கு அருகே, 'ஃபர்சா வாலே பாபா' என அழைக்கப்படும் பசு பாதுகாவலரான சந்திர சேகர் என்பவர் நேற்று நள்ளிரவு, பசு கடத்திச் செல்வதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் நாகலாந்து பதிவெண் கொண்ட ஒரு வாகனத்தை விரட்டிச் சென்றுள்ளார். அப்போது, அவர் சென்ற இருசக்கர வாகனம் மீது ஒரு லாரி மோதியதில் 'ஃபர்சா வாலே பாபா' உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இத்தகவல், கிராம மக்களிடையே பரவிய நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி இன்று அதிகாலை முதல் அவரது ஆதரவாளர்கள் டெல்லி ஆக்ரா நெடுஞ்சாலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்தது. இதன்காரணமாக, போலீசார் உட்பட பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர். மேலும், அரசு வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்கக் காவல்துறையினர் தடியடி நடத்த நேரிட்டது. மதுராவின் முக்கியமான சந்திப்புகள் மற்றும் பாபாவின் ஆசிரமம் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சந்திரசேகர், பசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பிரஜ் பகுதியில் அறியப்பட்டவர். அவரது மரணம், ஆதரவாளர்கள் மத்தியில் துக்கத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதிகாரிகள் தலையிட்டு அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்ததையடுத்து, போராட்டக்காரர்கள் இறுதியில் கலைந்துசெல்ல சம்மதிக்க வைக்கப்பட்டதாக சில உள்ளூர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, போராட்டம் கலைக்கப்பட்டிருந்தாலும், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையே தொடர்ந்து வருகிறது.
முன்னதாக, இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள மதுரா எஸ்.எஸ்.பி சுலோக் குமார், “ஃபர்சா வாலே பாபா ஒரு வாகனத்தில் பசு கடத்தப்பட்டிருக்கிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போது, அதிகமான பனிமூட்டம் காரணமாக ராஜஸ்தானைச் சேர்ந்த மற்றொரு வாகனம் பாபா சென்ற வாகனம் மீது மோதியதில் உயிரிழந்திருக்கிறார். அவர் சந்தேகித்த வாகனத்தில், மளிகைப் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் இரும்புக் கம்பிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. பசு கடத்தப்பட்டதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பசு பாதுகாவலர் 'ஃபர்சா வாலே பாபா-வின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.