மோடி, மாலத்தீவு அமைச்சர்கள்
மோடி, மாலத்தீவு அமைச்சர்கள் ட்விட்டர்
இந்தியா

பிரதமர் மோடி பற்றி மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம்: இந்தியாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்த பிரபலங்கள்

PT WEB

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தையும், இந்தியர்களையும் குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியுனா, மல்ஷா ஷரீப், மஜ்ஜூம் மஜித் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதேபோன்று ஆளும் பி.பி.எம். கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ் தெரிவித்திருந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு சஸ்பெண்ட் செய்தது. அத்துடன், இது அவர்களின் தனிப்பட்ட கருத்து எனவும், இதில் மாலத்தீவு அரசுக்கும் சம்பந்தமில்லை எனவும் விளக்கம் அளித்தது. எனினும், பிரதமர் மோடி தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்திருந்த நிலையில், அந்நாட்டு தூதர் இப்ராகிம் ஷாகீப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதேநேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பகிர்ந்த மாலத்தீவு அமைச்சருக்கு இந்திய பிரபலங்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள், லட்சத்தீவு மற்றும் சிந்துதுர்க் போன்ற இந்திய தீவுகளை அமைச்சர் மஹ்சூம் மஜித் பார்வையிட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ”மாலத்தீவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறிக் கருத்துகள் கூறப்பட்டுள்ளதாகவும், அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டிற்கு அவர்கள் இத்தகைய செயல்களைச் செய்வது ஆச்சரியமாக உள்ளது. இந்தியா அண்டை நாடுகளுடன் நல்லுறவோடு இருப்பதாகவும், இதுபோன்ற வெறுப்புணர்வை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும்” எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது என்றும், மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத் தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்றும் மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் EXPLOREINDIANISLANDS என்ற ஹேஷ்டேக் எக்ஸ் வலைத்தளத்தில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: ராஜஸ்தான் இடைத்தேர்தல்: அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் வேட்பாளர்.. பரிதாப தோல்வியடைந்த பாஜக அமைச்சர்!