ராஜஸ்தான் இடைத்தேர்தல்: அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் வேட்பாளர்.. பரிதாப தோல்வியடைந்த பாஜக அமைச்சர்!

ராஜஸ்தானில் கரண்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு மட்டும் நடந்த தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வியடைந்தார்.
ரூபிந்தர் சிங், சுரேந்திர பால் சிங்
ரூபிந்தர் சிங், சுரேந்திர பால் சிங்twitter

கடந்த ஆண்டு நடைபெற்ற 5 மாநில சட்டசபைத் தேர்தல்

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஆண்டு (2023) நவம்பர் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸும், மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கமும் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளன.

பஜன்லால் ஷர்மா
பஜன்லால் ஷர்மா

ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடித்த பாஜக

முன்னதாக, 200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில், 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கரம்பூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் நவம்பர் 12ஆம் தேதி, குருமீத் சிங் காலமானதால், அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாஜக 115 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் தனது காலடித் தடத்தை மீண்டும் ராஜஸ்தானில் பதித்தது.

முதல்முறையாக எம்எல்ஏவாகி முதல்வரான பஜன்லால் ஷர்மா!

பாஜகவின் அசுர வெற்றியை அடுத்து, அம்மாநிலத்தில் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்தது. இதனால் நீண்டநாட்கள் ஆகியும் பாஜக ஆட்சி அமைக்காமல் இருந்தது. இதையடுத்து, மத்தியப் பார்வையாளர்கள் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் ஒருமனதாக முதல்வர் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, டிசம்பர் 15ஆம் தேதி பஜன்லால் ஷர்மா முதல்வராகப் பதவியேற்றார். முதல்முறையாக எம்எல்ஏ ஆன பஜன்லால் ஷர்மா, அவருடைய பிறந்த நாள் அன்றே முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடன் தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

சுரேந்திர பால் சிங்
சுரேந்திர பால் சிங்

எம்.எல்.ஏ. ஆகாமல் அமைச்சர் ஆன சுரேந்திர பால் சிங்!

பின்னர் டிசம்பர் 30ஆம் தேதி, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, 22 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் சுரேந்திர பால் சிங் என்பவர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகப் பதவியேற்றார். ஆனால், இவர் தேர்தலில் நிற்காமல் பதவியேற்றார்.

காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்த பாஜக அமைச்சர்

இந்த நிலையில், மறைந்த குருமீத் சிங் தொகுதியான கரம்பூரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற கரம்பூர் தொகுதி தேர்தலில் பாஜக வேட்பாளராக அமைச்சர் பதவி சுரேந்திர பால் சிங் களம் இறக்கப்பட்டார். ஆனால், இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங்கிடம் மறைந்த குருமீத் சிங்கின் மகன்) அவர் தோல்வியடைந்தார். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் சுரேந்திர பால் சிங் 12,750 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து, அவர் அமைச்சர் பதவியை இழந்துள்ளார். அடுத்த 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றால்தான் தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சுரேந்திர பால் சிங்கை அமைச்சராக பாஜக நியமித்தது தேர்தல் நடத்தை விதிமீறல் எனவும், வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது.

அதேநேரத்தில் ரூபிந்தர் சிங்கின் வெற்றி குறித்து முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான அசோக் கெலாட், தன்னுடைய எக்ஸ் தளத்தில், “இந்த வெற்றியை மறைந்த குர்மீத் சிங் செய்த பொதுச் சேவைக்காக அர்ப்பணிக்கிறோம். தேர்தல் விதிமுறையை மீறி அமைச்சரை வேட்பாளராக நிறுத்திய பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த வெற்றியால் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com