பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகின்றன. குறிப்பாக அவர் உடல்நல பிரச்சினைகளுடன் போராடி வருகிறார் என்றும் ஆட்சியை பாஜகவே நடத்தும் என்றும் தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சிகளால் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இத்தகைய சூழலில் நிதீஷ் குமாரின் சமீபத்திய நடவடிக்கை மேலும் விமர்சனங்களைத் தூண்டிவிட்டிருக்கிறது.
மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதம் வழங்கிய நிகழ்வில், இஸ்லாமிய பெண் ஒருவரின் ஹிஜாப்பை இழுத்தார் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரவிய நிலையில், பலரும் அவருக்கு தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். ஆர்.ஜே.டி., காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும், நடிகை ஜைரா வாசிம் உள்ளிட்டோரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தில் நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஜைரா வாசிம் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், நிதிஷ் குமாருக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச அரசில் மீன்வளத் துறை அமைச்சராக இருக்கும் சஞ்சய் நிஷாத், “அவர் ஹிஜாபை இழுக்கவில்லை. நியமனக் கடிதம் சரியான நபருக்குத்தான் வழங்கப்படுகிறதா என்பதைச் சரிபார்க்கவே அதை அகற்றினார். இதற்காக மக்கள் கூச்சலிடக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவரும் ஒரு மனிதர்தான். அவரைத் துன்புறுத்தக் கூடாது. ஹிஜாபைத் தொட்டதற்கே இவ்வளவு பெரிய அமளி ஏற்பட்டிருக்கிறது. வேறு எதையாவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்” என அருவருக்கத்தக்க வகையிலும், மோசமாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அவருடைய இந்தக் கருத்து, நிதிஷ் குமார் ஹிஜாபை இழுத்ததைவிடச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிஷாத்தின் கருத்துகளுக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத், "இந்த வெட்கக்கேடான வார்த்தைகளை உத்தரப் பிரதேச அரசு அமைச்சர் சஞ்சய் நிஷாத் சிரித்துக்கொண்டே கூறுகிறார். அவர் இதைச் சொல்லும் விதமும், அந்த நயவஞ்சகச் சிரிப்பும் அவருடைய இழிவான, அபத்தமான மற்றும் பெண் வெறுப்பு மனப்பான்மையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுமையா ராணா லக்னோவில் நிதிஷ் குமார் மற்றும் சஞ்சய் நிஷாத் ஆகிய இருவருக்கும் எதிராக புகார் அளித்தார். தலைவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராணா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், தனது கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக தெளிவுபடுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான இரண்டாவது அரசாங்கத்தில் மீன்வளத் துறை அமைச்சராகப் பணியாற்றி வரும் சஞ்சய் நிஷாந்த், கடந்த 2021 முதல் அம்மாநில சட்ட மேலவையின் உறுப்பினராக உள்ளார். நிஷாத் சாதியைச் சேர்ந்த இவர், 2016ஆம் ஆண்டில் நிஷாத் கட்சியை நிறுவினார்.