ஹிஜாப் விவகாரம் | ”நிதிஷ்குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” - நடிகை வலியுறுத்தல்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மேடையில் முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாபை, இழுத்தது தொடர்பாக நடிகை ஜைரா வாசிம் அவரை விமர்சித்துள்ளார். இந்தச் செயல் ஆத்திரமூட்டுவதாகவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள முதல்வரின் செயலகமான 'சம்வாத்'தில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் 1,283 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. அவர்களில் 10 பேருக்கு நியமனக் கடிதங்களை நிதிஷ் குமார் வழங்கினார், மீதமுள்ளவர்கள் ஆன்லைனில் பெற்றனர். அதில் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் என்ற பெண்ணும் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றும்படி முதல்வர் சைகை காட்டினார். அந்தப் பெண் ஹிஜாப்பை அகற்றும் முன்பே, நிதிஷ் குமார் ஹிஜாப்பை பிடித்து கீழே இழுத்தார்.
நிதிஷ் குமார் இப்படிச் செய்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அருகே துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி இருந்தார். அவர் நிதிஷ்குமாரை தடுக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகி இருந்தது. இக்காணொளி இணையத்தில் வைரலான நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மாநில எதிர்க்கட்சிகளான ஆர்.ஜே.டி., காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா போன்றவை கடுமையாக விமர்சித்திருந்தன. இந்த சர்ச்சை தொடர்பாக தொடர்ந்து நிதிஷ் குமாருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அவரோ அல்லது அவரது அலுவலகத்திடமிருந்தோ எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை. ஆனால் இந்த விஷயம் மாநிலத்தைத் தாண்டியும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில் முதல்வரின் இந்தச் செயலைக் கண்டித்திருக்கும் நடிகை ஜைரா வாசிம், நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், “ஒரு பெண்ணின் பண்பும் மரியாதையும் விளையாட்டுப் அல்ல. அதுவும் பொதுமக்கள் முன் அவற்றைச் சாதாரணமாகச் செய்துகாட்டுவது இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு இஸ்லாமிய பெண்ணாக, மற்றொரு பெண்ணின் நிகாப் இவ்வளவு அலட்சியமாக இழுக்கப்பட்டதையும், அதோடு அந்த கவலையற்ற புன்னகையையும் பார்த்தது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. எல்லைகளை மீற அதிகாரம் அனுமதிப்பதில்லை. நிதிஷ்குமார் அந்தப் பெண்ணிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
’தங்கல்’ மற்றும் ’சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜைரா வாசிம். இவர், கடைசியாக ஷோனாலி போஸின் 2019ஆம் ஆண்டு வெளியான ’தி ஸ்கை இஸ் பிங்க்’ என்ற படத்தில் நடித்திருந்தார். திரைப்படத் துறை தனது தனிப்பட்ட நம்பிக்கையுடன் முரண்படுவதாகக் கூறி நடிப்பிலிருந்து ஜைரா வாசிம் விலகியது குறிப்பிடத்தக்கது.

