Child
Child twitter
இந்தியா

உ.பி.: பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க ஓடிய சிறுமி.. ரயில்முன் தள்ளி கொலை செய்ய முயற்சி!

Prakash J

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 10ஆம் தேதி சிறுமி ஒருவர், பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அப்போது விஜய் மெளரியா என்ற நபா், அந்தச் சிறுமியை இடைமறித்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயன்றதாகவும் போலீசாரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து தப்பித்து ரயில்வே தண்டவாளத்தையொட்டி ஓடிய சிறுமியைப் பின்தொடா்ந்த மெளரியா, ரயிலில் தள்ளி கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதில், அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் அந்தச் சிறுமியின் ஒரு கையும் இரு கால்களும் துண்டிக்கப்பட்டன. பலத்த காயமடைந்த அந்தச் சிறுமி மீட்கப்பட்டு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: உத்தரப்பிரதேசம்: சாலைப் பணியில் ஈடுபட்ட காவலரை செருப்பால் தாக்கிய பெண்... வைரலாகும் வீடியோ!

இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், மெளரியா மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாா். உடன் இருந்ததாகக் கூறப்படும் நபா் சாட்சியமாகச் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் குறித்து புகாா் அளிக்கப்பட்டபோதும், போலீசார் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என சிறுமியின் தந்தை குற்றஞ்சாட்டினாா். அதனடிப்படையில் பணியின்போது அலட்சியமாக இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாகவும் மாவட்ட ஆட்சியா் ரவீந்திர குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, உயர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 2011 உலகக்கோப்பை: அரையிறுதியில் சதத்தைத் தவறவிட்ட சச்சின்.. தற்போது விளக்கம் அளித்த சேவாக்!