இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் ஆகியோர் அவ்வப்போது, அதிக பணி நேரம் குறித்துப் பேசி வருகின்றனர். அதாவது, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் (6 நாட்கள் வேலை) என்பதே அவர்களது வலுவான கோரிக்கையாக உள்ளது. இவர்களுடைய கருத்துக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். என்றாலும் அவ்வப்போது, இந்த கருத்து மீண்டும்மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வரும் மக்களவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ், ' வாரத்திற்கு 90 மணிநேர வேலை ' என்று வாதிடுபவர்களை கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், இத்தகைய யோசனை மனிதர்களுக்கா அல்லது ரோபோக்களுக்கா என கேள்வி எழுப்பியுள்ள அவர், ”வேலையின் தரம், அதன் அளவை விட மிக முக்கியமானது. வாரத்திற்கு 90 மணி நேர வேலை என்று வலியுறுத்துபவர்கள் முதலில் தங்கள் இளமைப் பருவத்தில் இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றினார்களா என்பதைச் சிந்திக்க வேண்டும். அப்போது அவர்கள் உண்மையிலேயே வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்திருந்தால், நமது பொருளாதாரம் ஏன் இந்த நிலையை மட்டும் எட்டியுள்ளது” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அவர், “உண்மை என்னவென்றால், மேலே அமர்ந்திருப்பவர்கள் எதுவும் செய்யாமல் இளைஞர்களின் கடின உழைப்பின் அதிகபட்ச பலனைப் பெறுகிறார்கள். மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் வாழ விரும்புகிறார்கள். ஒருசிலர் தான் பொருளாதார வளர்ச்சியால் பலன் அடைகிறார்கள்.
பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலர்களை எட்டுகிறதா அல்லது 100 டிரில்லியன் டாலர்களை எட்டுகிறதா என்பது சாதாரண குடிமகனுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. இளைஞர்களுக்கு கைகள், கால்கள் அல்லது உடல் மட்டுமல்ல, சுதந்திரமாக வாழ விரும்பும் இதயமும் இருக்கிறது என்பதை இந்த மக்கள் மறந்துவிடக் கூடாது. அது மணிக்கணக்கில் வேலை செய்வது பற்றியது அல்ல, மாறாக முழு மனதுடன் வேலை செய்வது பற்றியது.
உண்மையான பொருளாதார நீதி என்பது அனைவரும் சமமாக செழிப்பின் பலன்களைப் பெறுவதே ஆகும். மனரீதியாக ஆரோக்கியமான சூழல் இளைஞர்களிடையே படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித்திறனை வளர்க்கிறது, இது ஒரு சிறந்த தேசத்தை உருவாக்க உதவுகிறது. பொழுதுபோக்கு மற்றும் திரைப்படத் துறை பொருளாதாரத்திற்கு பில்லியன் கணக்கான பங்களிப்பு செய்கின்றன.
இது மக்கள் புத்துணர்ச்சியுடனும், புத்துயிர் பெற்றவர்களாகவும், மீண்டும் உற்சாகமாகவும் உணர உதவுகிறது, இது இறுதியில் வேலை தரத்தை மேம்படுத்துகிறது. அவை பொருளாதாரத்தில் பில்லியன் கணக்கான ரூபாயைச் சேர்க்கின்றன. நீந்தச் சொல்லச் சொல்வதால் மட்டும் மூழ்கும் படகைக் காப்பாற்ற முடியாது” என தனது தளத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.