இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. 6 கோடிக்கும் மேல் பெண் வாக்காளர்கள் கொண்ட அம்மாநிலத்தில், அவர்களின் வாக்குகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்தச்சூழலில் தான், பெண்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் 'ஸ்திரீ சம்மான் சம்ரித்தி யோஜனா' (Stree Samman Samridhhi Yojna) திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்தச்சூழலில் தான், அதற்கு ஈடு கொடுக்கும் விதமாகவும் ஆளும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியத் தக்கவைக்கும் நோக்கிலும் பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. கடந்த நவம்பர் 3ஆம் தேதி லக்னோவில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பெண்களின் பொருளாதார சுயசார்பை அதிகரிக்கும் வகையில் சிறப்பான நிதித் தொகுப்பு ஒன்றைத் தனது அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அது எந்தவகையான திட்டமாக இருக்கும் என அவர் முழுமையாக தெளிவுபடுத்தப்படவில்லை.
இந்தச்சூழலில் தான், பெண்களுக்கு ரூ.50,000 வரை நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாஜக அரசு பரிசீலித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, இந்த நிதியுதவியை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து இரண்டு வழிகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முதலாவது, தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரே தவணையாக நேரடியாகப் பணத்தைச் செலுத்துவது. இரண்டாவது, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள முதலமைச்சரின் கன்யா சுமங்கலா யோஜனா (Mukhyamantri Kanya Sumangala Yojana) மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் வாயிலாக இந்த உதவியை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தத் திட்டத்தின் இறுதி வடிவம், பயனாளிகளுக்கான தகுதிகள், நிதியுதவி வழங்கப்படும் முறை உள்ளிட்ட எந்த விவரங்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. தமிழ்நாடு, பிகார் உள்ளிட்டத் சட்டப்பேரவைத் தேர்தல்களைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும் பெண்களுக்கான நிதியுதவித் திட்டங்கள் முக்கிய விவாதமாக உருவெடுத்துள்ளன.