நடுவானில் கடத்தல் மிரட்டல்! அலறியடித்து பெங்களூருக்குத் திரும்பிய இண்டிகோ விமானம்!
செய்தியாளர் - M.மீரா
பெங்களூருவில் இருந்து லக்னோ நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் மீண்டும் பெங்களூருக்கே திருப்பப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
178 பயணிகளுடன் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில், பயணி ஒருவர் கழிப்பறைக்குச் சென்றபோது கைப்பட எழுதப்பட்ட கடிதத்தைக் கண்டுள்ளார். அதில், மாலை 6.30 மணிக்கு விமானம் கடத்தப்படும் என்றும், எச்சரிக்கையை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து விமானப் பணிப்பெண்களிடம் அவர் தகவல் தெரிவித்தார். உடனே விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, விமானத்தை பெங்களூருக்கே திருப்பினார்.
விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும், பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பாதுகாப்புப் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் விமானத்தையும் உடைமைகளையும் சோதனை செய்தனர். இறுதியில், அது போலியான மிரட்டல் என்பது தெரியவந்தது.

