மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 30 பேர் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளது. அவர்களில் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த 60க்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மெளனி அமாவாசை என்பதால் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடியதும், தடுப்புகளை உடைத்து திரிவேணி சங்கமத்தை நோக்கி, பக்தர்கள் பெருமளவில் திரண்டு சென்றதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துயர நிகழ்வு குறித்து நீதி விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.