ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். 'ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த தாக்குதலில், பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. அதிகாலை 1:05 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை நீடித்த இந்தத் தாக்குதலில், அதாவது 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளை இந்திய ராணுவமும், விமானப் படையும் ஏவின. இந்த தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்திய ராணுவத்தைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர், “இந்திய ராணுவம், பயங்கரவாதிகளுக்குச் சரியான பதிலடியை தந்திருக்கிறது. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியால்தான் இந்த தாக்குதல் சாத்தியமானது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை. தாக்குதல் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை மட்டுமே தாக்கியுள்ளோம். பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் திட்டமிட்டுத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூரின் இலக்கு முழுமையாக எட்டப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்திய வீரர்கள் மகத்தான தைரியத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்திய முப்படைகளால் நாட்டிற்குப் பெருமை. துல்லியத் தாக்குதல் மூலம் இந்தியா தனது உரிமையை நிலைநாட்டி உள்ளது” எனத் தெரிவித்தார்.