ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
2021ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு, அங்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. தாலிபனின் இந்தக் கட்டுப்பாடுகள் உரிமைக் குழுக்கள் மற்றும் பல வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றன. இதனால், உலக நாடுகள் தாலிபன் அரசை அங்கீகரிக்கத் தயங்கினாலும், ரஷ்யா அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், தாலிபனின் தற்போதைய ஆட்சியை அங்கீகரிக்கும் முதல் நாடாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலையை ரஷ்யா பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி, முதல்முறையாக ஒரு வாரகால பயணமாக இந்தியா வந்துள்ளார். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையும் மீறி உள்ளே நுழைந்த சில பெண் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரம், செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ஆண் பத்திரிகையாளர்கள் பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கோரியுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தேர்தலுக்காக மட்டும் பெண்கள் உரிமைகளை அங்கீகரிப்பதாக நீங்கள் நாடகமாடவில்லை என்றால், பெண்களை முதுகெலும்பாகவும் பெருமையாகவும் கொண்ட நம் நாட்டில் மிகவும் திறமையான பெண்களில் சிலருக்கு இந்த அவமானம் எப்படி அனுமதிக்கப்பட்டது" என்று வினவியுள்ளார்.
காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் மத்தியமைச்சருமான ப.சிதம்பரம், “பத்திரிகையாளர்கள் விலக்கப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது தனிப்பட்ட பார்வையில், ஆண் பத்திரிகையாளர்கள் தங்கள் பெண் சகாக்கள் அனுமதிக்கப்படாததை அல்லது அழைக்கப்படாததைக் கண்டறிந்தபோது வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ”பெண் பத்திரிகையாளர்களை விலக்க தாலிபன் அமைச்சரை அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் ஒவ்வொரு இந்தியப் பெண்ணையும் அவமதித்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு பத்திரிகையாளர்களை தேர்ந்தெடுத்து அழைத்தவர்கள் ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகள் என்றும் ஆப்கானிஸ்தான் தூதரகம் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.