sridhar vembu sridhar vembu
இந்தியா

AI-ஆல் ஆபத்து.. சீன இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம்! ஸோகோ நிறுவனர் வேம்பு எச்சரிக்கை!

சீனாவில் இளைஞர்கள் வேலையில்லா திண்ட்டாட்டத்திற்கு ஆளாகியிருப்பதை சுட்டிக்காட்டி ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார்.

Rishan Vengai

சீனாவில் பட்டதாரிகள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். ஏஐ மற்றும் தானியக்க மயமாக்கல் வேலைவாய்ப்புகளை குறைக்கிறது. இந்தியா தொழில்முனைவு வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என வேம்பு கூறுகிறார்.

சீனாவில் பட்டதாரிகளிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதாக ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்துத்தெரிவித்துள்ள அவர், சீனா 1 புள்ளி 2 டிரில்லியன் டாலர் வர்த்தக உபரி பெற்றிருந்தும், இளைஞர்களுக்கு வேலை தர இயலவில்லை என்று கூறியுள்ளார். ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் நிலையான மாதச் சம்பள வேலைகளைச் சவாலுக்குள்ளாக்குகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் பெரிய தொழில்முனைவு மற்றும் சுயதொழில் சார்ந்த பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீதர் வேம்பு

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “பல தசாப்தங்களாக, சீன இளைஞர்களுக்கு ஒரு எளிய வாக்குறுதி அளிக்கப்பட்டது: கடினமாகப் படியுங்கள், நல்ல வேலையைப் பெறுங்கள், உங்கள் பெற்றோரை விட அதிக செல்வந்தர்களாக ஆகுங்கள். அந்த வாக்குறுதி இப்போது சிதைந்து கொண்டிருக்கிறது.

சீனா உலகின் தொழிற்சாலையாகத் திகழ்கிறது; பல்வேறு துறைகளில் ஈர்க்கக்கூடிய தொழில்நுட்பத் திறன்களைக் கொண்டுள்ளது; 1.2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக உபரியைக் (trade surplus) கொண்டுள்ளது. இருப்பினும், கல்லூரிக் கல்வி பயின்ற அதன் இளைஞர் கூட்டத்திற்குத் தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்க அதனால் இயலவில்லை.

சீனாவில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட வேலையற்றவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்கள் ஆவர்.

உலகெங்கிலும் உள்ள நமது நவீன கல்வி மற்றும் பொருளாதார அமைப்புகள், இளைஞர்களை "நிலையான ஊதியம்" தரும் வேலைகளுக்காகத் தயார்படுத்துகின்றன. ஆனால், இத்தகைய வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதற்குப் பதிலாக, தானியங்கி மயமாக்கல் (automation) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றால் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

இந்தச் சிக்கல் சீராவதற்குப் பதிலாக, இன்னும் மோசமடையவே போகிறது.

இதற்கான தீர்வு என்ன? தொழில்முனைவு (entrepreneurship) மற்றும் சுயதொழில் ஆகியவற்றில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படுவதுதான். 20-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை, அமெரிக்காவின் செழிப்புக்குக்கூட இதுவே அடித்தளமாக இருந்தது. பெரிய தொழில் நிறுவனங்களில் கிடைக்கும் "நிலையான ஊதியம்" கொண்ட வேலைகள் என்பது மிக அண்மைக் காலத்தில்தான் உருவானவை. நாம் அந்த மாதிரியிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்.

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.