ISI தரச்சான்றிதழ் பெறாத ஆயிரக்கணக்கான பொருட்களை அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் கிடங்குகளில் இருந்து அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். லக்னோவில் உள்ள அமேசான் கிடங்கில் BIS எனப்படும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் உரிய தரச்சான்றிதழ் பெறாத பொம்மைகள் உள்ளிட்ட 229 பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதே போல குருகிராமில் உள்ள மற்றொரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் குடிநீர் வைக்கும் உலோக பாட்டில்கள், அலுமினியம் ஃபாயில்கள், பொம்மைகள், பிவிசி ஒயர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட சான்றிதழற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குருகிராமில் ஃப்ளிப்கார்ட் நிறுவன கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையிலும் 534 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர 7 ஆயிரம் வாட்டர்ஹீட்டர்கள், 95 ரூம் ஹீட்டர்கள், 40 கேஸ் ஸ்டவ்கள் என பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2 வாரங்களில் பல்வேறு கட்டங்களாக இச்சோதனைகள் நடைபெற்றதாக மத்திய அரசின் நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே BIS அமைப்பின் சான்று பெற்ற பொருட்களை மட்டுமே விற்குமாறு அமேசான், ஃப்ளிப்கார்ட் , மீஷோ, மிந்த்ரா, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு அந்த அமைப்பு நோட்டீஸ் அனுப்பியள்ளது. ஐஎஸ்ஐ தரச்சான்று இல்லாத மற்றும் ஐஎஸ்ஐ உரிம எண் இல்லாத பொருட்கள் பாதுகாப்பு அபாயம் ஏற்படுத்தக்கூடியவை என்றும் BIS அமைப்பு தெரிவித்துள்ளது. கடைகளில் உள்ள பொருட்களின் சான்று நிலையை அறிய BIS Care App ஐ பயன்படுத்த வேண்டும் எனவும் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொருட்களை காண நேர்ந்தால் அது குறித்து அந்த செயலியில் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தைகளில் விற்கப்படும் தரச்சான்று இல்லாத பொருட்களை கண்டறியும் தங்கள் ஆய்வுகள் தொடரும் என்றும் BIS அமைப்பு தெரிவித்துள்ளது