ஆக்ரா அருகே கத்வார் கிராமத்தில், 108 ஆம்புலன்ஸ் இரவு 1 மணிக்கு கர்ப்பிணி நிதி சிங்கை ஏற்றி சென்றபோது, மோசமான கிராமச் சாலையில் உள்ள பெரிய பள்ளத்தில் சிக்கி 2 மணி நேரம் நின்றது. டிராக்டர் உதவியுடன் மீட்ட பின் அதிகாலை 3.30க்கு மருத்துவமனை சென்றபோது, குழந்தை கருவிலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது. 6 மாதத்திற்கு முன் சீரமைக்கப்பட்ட சாலை மழையில் சேதமடைந்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு குழந்தையின் உயிர் சரிசெய்யப்படாத சாலை பள்ளத்தாலும், பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத அரசு ஊழியர்களின் அலட்சியத்தாலும் கருவிலேயே பறிபோயிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை பள்ளத்தில் 2 மணிநேரம் சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸில் துடிதுடித்த தாய், தன்னுடைய குழந்தையின் அழுகுரலை கடைசிவரை கேட்காமல் கருவிலேயே மரணித்து மௌனமாய்ப் போன ரணத்தை மட்டுமே அனுபவித்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா அருகே உள்ள கத்வார் கிராமத்தில், நிதி சிங் என்ற 25 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இரவு 1 மணியளவில் கர்ப்பிணி வலியில் துடித்ததால் குடும்பத்தார் 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். அப்போது உடனடியாக சரியான நேரத்திற்கு கர்ப்பிணியின் வீட்டிற்கு வந்த ஆம்புலன்ஸ், கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளது. அப்போது நள்ளிரவு 1 மணியளவில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், மழையினால் மோசமடைந்திருந்த கிராமப்புற இணைப்புக் சாலையில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டுள்ளது. சேறும் சகதியுமாக இருந்த அந்தப்பள்ளத்திலிருந்து வண்டியை மீட்க எவ்வளவு போராடியும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் வண்டியை வெளியேற்ற முடியவில்லை. அதன்பின் அருகிலிருந்த கிராமத்தினர் விவரத்தை அறிந்து ஒரு டிராக்டரை கொண்டுவந்து ஆம்புலன்ஸை கயிறு மூலம் கட்டி வெளியேற்ற முயன்றுள்ளனர். இதைச் செயல்படுத்தி முடித்து ஆம்புலன்ஸை பள்ளத்திலிருந்து மீட்கவே சுமார் 2 மணிநேரம் காலவிரையம் ஆகியுள்ளது.
2 மணிநேர தாமத்திற்கு பிறகு அதிகாலை 3:30 மணியளவில் அந்த கர்ப்பிணிப் பெண் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், நீண்ட நேரத் தாமதத்தின் காரணமாக குழந்தை தாயின் கருவிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசயம் குறித்து வேதனையுடன் தெரிவிக்கும் கிராம மக்கள், இந்த சேதமடைந்த சாலை 6 மாதங்களுக்கு முன்புதான் பொதுப்பணித் துறையால் (PWD) சீரமைக்கப்பட்டது என்றும், ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பே பெய்த கனமழையால் மோசமடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கருவிலேயே குழந்தை உயிரிழந்துவிட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்குப் பின் தாய் காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 2ஆம் தேதி நடந்த இந்த மோசமான சம்பவத்திற்கு பிறகு அப்பெண்ணின் கணவர், சாலையைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் புகார் கடிதம் கொடுத்துள்ளார். இவ்விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..