அடம்பிடித்த குழந்தை.. ரத்து செய்யப்பட்ட விமானம்! கனடாவில் நடந்த வினோத சம்பவம்!
கனடாவின் விக்டோரியா விமான நிலையத்தில் இருந்து டொராண்டோ நோக்கி புறப்பட்ட போர்டர் ஏர்லைன்ஸ் விமானத்தில், சிறு குழந்தை ஒன்று இருக்கையில் அமர மறுத்து, சீட் பெல்ட் அணிய அடம்பிடித்தது. பெற்றோர், பணியாளர்கள் பலமுறை சமாதானப்படுத்தியும் பயனின்றி, பாதுகாப்பு விதிகள் காரணமாக விமானம் டெர்மினலுக்கு திரும்பி, குழந்தை குடும்பம் இறக்கப்பட்டனர். ஓடுபாதை நேரம் முடிவதால், முழு விமானமும் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் மறுநாள் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
குழந்தைகள் தனக்குத் தேவையான ஒன்றை எப்படி அடம்பிடித்து வாங்க வேண்டும் என்ற யுக்தியை எங்கு கற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை… அந்த விஷயத்தில் பெரும்பாலான குழந்தைகள் கைதேர்ந்தவர்கள்தான்! விமானப் பயணம் என்றாலே… “Seat belt போட்டாச்சா?” என்ற கேள்விதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், கனடாவில் ஒரு சிறு குழந்தை Seat belt அணிய மறுத்து அடம்பிடித்ததால், ஒட்டுமொத்த விமானமும் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள Victoria International Airport-ல் இருந்து Toronto நோக்கி Porter Airlines விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் ஓடுபாதையை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, அதில் பயணித்த சிறு குழந்தை ஒன்று தனது இருக்கையில் அமராமல் எழுந்து நின்றதாகவும், Seat belt அணிய மறுத்ததாகவும் கூறப்படுகிறது. குழந்தையை பாதுகாப்பாக இருக்கையில் அமர வைத்து Seat belt அணிவிக்க பெற்றோரும், விமானப் பணியாளர்களும் பலமுறை முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்தக் குழந்தை யாருடைய பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து அடம்பிடித்ததாக சொல்லப்படுகிறது.
விமானப் பாதுகாப்பு விதிகளின்படி குழந்தையை பாதுகாப்பாக இருக்கையில் அமர வைக்க முடியாததால், விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் Terminal-க்கு திரும்பியது. தொடர்ந்து, குழந்தையையும் அதன் பெற்றோரையும் அவர்களது உடைமைகளுடன் விமானத்தில் இருந்து இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், குழந்தை மற்றும் பெற்றோரை இறக்கி, விமானத்தை மீண்டும் இயக்குவதற்குள் ஏற்பட்ட தாமதம் எதிர்பாராத சிக்கலை ஏற்படுத்தியது. Victoria International Airport-ன் ஓடுபாதை இயக்க நேரம் இரவு 12.30 மணியுடன் முடிவடைவதால், அதற்குள் விமானத்தை மீண்டும் இயக்க முடியவில்லை.
இதனால், அந்த விமானத்தை அன்றைய தினம் தொடர்ந்து இயக்க முடியாமல், முழு விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். அவர்களுக்கு மறுநாள் Toronto செல்லும் மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு Porter Airlines நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. ஒரு சிறு குழந்தையின் அடம்பிடிப்பு காரணமாக ஒரு விமானமே ரத்து செய்யப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதேநேரத்தில், சிறு குழந்தையாக இருந்தாலும் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
