உத்தரப்பிரதேசம் ஜான்சியைச் சேர்ந்தவர், பிரியான்ஷா சோனி (36). இவர், அம்மாநிலத்தில் சைத்ர நவராத்திரியைக் கொண்டாடவும், துர்கா தேவியை வழிபடவும் தயாராகிக் கொண்டிருந்தார். இதற்காக, தனது கணவர் முகேஷ் சோனியிடம் பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருமாறு கேட்டுள்ளார். அவரும் அவற்றி வாங்கிவந்து கொடுத்துள்ளார். இதற்கிடையே ஒன்பது நாள் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, அதாவது சைத்ர நவராத்திரியின் முதல் நாளான மார்ச் 30 அன்று, சோனிக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, சோனியால் அந்த நவராத்திரி பிரார்த்தனையில் கலந்துகொள்ள முடியாமல் போனது. (மாதவிடாய் தூய்மையற்றதாகக் கருதப்படுவதால், அக்காலத்தில் பெண்கள் பிரார்த்தனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது). இதனால் சோனி மனமுடைந்துள்ளார். என்றாலும், அவரது கணவர் ஆறுதல் படுத்திவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால், தொடர்ந்து இதே அழுத்தத்தில் இருந்த அவர், விஷம் குடித்தார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும் அடுத்து வந்த நாட்களில் அவரது உடல் நலம் குன்றியதைத் தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து ப்ரியான்ஷா கணவர் முகேஷ், “இந்த நவராத்திரிக்காக அவர் ஒருவருடம் காத்திருந்தார். ஆனால் அது வந்த போது, மாதவிடாய் காரணமாக அவரால் விரதம் இருக்கவோ அல்லது தெய்வத்தை வணங்கவோ முடியவில்லை. இதையடுத்து அவர் மன அழுத்தத்தில் இருந்தார். ‘இது எல்லாம் எப்படி நடக்கும்? இப்படி இருந்தால் யார் பிரார்த்தனை செய்வார்கள்’ என என்னிடம் புலம்பினார். ’மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான செயல்முறை. தவிர, மாதாந்திர நிகழ்வு என விளக்கினேன். தொடர்ந்து, அவளுக்கு நான் ஆறுதல் கூறினேன். ஆனால் அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் சார்பாக அனைத்துச் சடங்குகளையும் செய்ய நான் முன்வந்தேன், ஆனால் அவள் கடைசிவரை சோகமாகவே இருந்தாள்" எனத் தெரிவித்துள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.